சுற்றி இருந்தவர்கள் கொடுத்த ஆசை.. மனைவியின் தாலியை விற்று கடன் தீர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டி. ஆர். மகாலிங்கம்

By Ajith V

Published:

தமிழ் சினிமாவில் ஒரு துறையில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஏதாவது ஒரு பிசினஸை செய்து அதில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பார்கள். ஒரு வேளை என்றாவது ஒரு நாள், சினிமாவில் தங்களுக்கான வாய்ப்பு குறையும் போது அந்த தொழில் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான்.

இன்னொரு பக்கம், சினிமாவில் கிடைக்கும் வருமானத்தை சினிமாவிலேயே முதலீடு செய்யும் ஆட்களும் நிறைய பேர் இருப்பார்கள். உதாரணத்திற்கு கமல்ஹாசன், விஷால் உள்ளிட்ட பல பேரை சொல்லலாம். அந்த வகையில், பிரபல நடிகராக இருந்த ஒருவர், படத்தை தயாரிக்க முடிவு செய்து அதன் பின்னர் நடந்த சம்பவம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் மற்றும் பாடகராக இருந்தவர் டி. ஆர். மகாலிங்கம். ஒரு பக்கம் நடிப்பில் பட்டையை கிளப்பிய மகாலிங்கம், இன்னொரு பக்கம் தனது குரலால் பல சூப்பர் ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார். அந்த காலத்தில் அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ள டி. ஆர். மகாலிங்கம், சுசீலா, ஜானகி, சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட பின்னணி பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ளார்.

இப்படி நடிப்பு மற்றும் பாடல்கள் என இரண்டிலும் வருமானம் பார்த்த டி. ஆர். மகாலிங்கம், சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளார். மேலும் இவரிடம் பணம் இருந்ததால் சுற்றி இருந்தவர்களும் அந்த பணத்தை கொண்டு படம் தயாரிக்கும் படி ஆசையை காட்ட, சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார் டி. ஆர். மகாலிங்கம்.

அப்படி அவர் தயாரித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகி மகாலிங்கத்தை ஒரு தயாரிப்பாளர் ஆக்கியதே தவிர, இதன் மூலம் அவருக்கு எந்தவித லாபமும் உருவாகாமல் பெரும் நட்டத்திலும் தள்ளாடினார். அப்படி ஒரு கட்டத்தில் தனது மனைவியின் தாலியை விற்கும் சூழலும் மகாலிங்கத்திற்கு உருவானது. தொடர்ந்து, தன்னை வைத்து படம் எடுத்து பெரிய ஆளானவர்கள் யாருமே தன்னை கண்டு கொள்ளாமல் போனதால் மிக பிரச்சனையை தான் சந்தித்ததாக சில பேட்டியில் மகாலிங்கமே கூறி உள்ளார்.

இப்படி பிரச்சனையில் தவித்த டி. ஆர். மகாலிங்கத்திற்கு சரியான நேரத்தில் பண உதவி செய்து அவரை காப்பாற்றியவர் அவருடைய மாமனார் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. டி. ஆர். மகாலிங்கத்தை போல சினிமாவில் சிறந்த நடிகர்களாக திகழ்ந்த பலரின் செல்வாக்கு மற்றும் பெயரும் பறிபோக அவர்கள் சொந்த பணத்தின் மூலம் திரைப்படங்கள் எடுத்ததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.