மக்களின் அன்பும், பாசமும் போதும்… இந்த விருது எல்லாம் எனக்கு வேண்டாம்.. கிடைத்த விருதை திருப்பி அனுப்பிய எம்ஜிஆர்!

By Velmurugan

Published:

தமிழ் சினிமாவின் சரித்திர நாயகனாக வலம் வந்த முன்னணி ஹீரோ தான் நடிகர் எம் ஜி ஆர். வாள் சண்டையில் மன்னனாக நடித்து வந்த எம்ஜிஆர் சண்டைக் காட்சிகளில் மட்டுமில்லாமல் நகைச்சுவை காட்சிகளிலும் சிறந்த நடிகராக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த திரைப்படம் தான் சபாஷ் மாப்பிள்ளை. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல மதிப்பை பெற்றிருந்தது. மேலும் நடிகர்கள் எம்ஜிஆருக்கு தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் போட்டி போட்டு நடிக்கும் பழக்கமும் ஒருபோதும் கிடையாது.

தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் எந்தவித மிகை ஒப்பனை நடிப்பும் இல்லாமல் இயல்பாகவும், எதார்த்தமாகவும் நடிக்கக்கூடிய மிகச்சிறந்த நடிகர் தான் எம்ஜிஆர். ஓவர் ஆக்டிங் என்று சொல்லப்படும் அதிகப்படியான நடிப்பை எம்ஜிஆரின் எந்த திரைப்படத்திலும் நாம் பார்க்க முடியாது. இந்த நேரத்தில் ரிக்ஷாக்காரன் படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மிகச்சிறப்பாகவும் மென்மையாகவும் நடித்ததற்காக 1971 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான பாரத் விருது வழங்க எம்ஜிஆர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அந்த நேரத்தில் இதய வீணை படப்பிடிப்பிற்காக நடிகர் எம்.ஜி.ஆர் காஷ்மீர் சென்று இருந்தார். அப்போது காஷ்மீர் வானொலி நிலையம் பாரத் விருது கிடைத்தது குறித்து நடிகர் எம் ஜி ஆர் இடம் ஒரு பேட்டி ஒன்றை நடத்தியது. அதில் பேசிய எம் ஜி ஆர் இந்த விருது தனக்கு கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த விருது எனக்கு கிடைத்துள்ளதாக செய்தி என்னிடம் வந்து சேரும் பொழுது அதை நம்புவதற்கு சில நேரம் பிடித்ததாகவும் கூறினார். மேலும் பாரத் விருது வழங்குவதற்கான விழா கொல்கத்தாவில் நடைபெற்றது. அப்போது மேற்கு வங்க முதல்வராக இருந்த சித்தார்த் சங்கர் நடிகர் எம்ஜிஆருக்கு பாரத் விருது வழங்கி கௌரவித்தார்.

வணிக ரீதியாக வெற்றி பெற்ற ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் நடிகர் எம்ஜிஆரின் நடிப்பிற்கு பாரத் விருது வழங்கியது குறித்து பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவர துவங்கியது. இதை கவனித்த எம்ஜிஆர் அதற்கு பதிலடி ஒன்றும் கொடுத்துள்ளார். அதில் இந்த விருதுக்கு நான் தகுதியில்லை என்று கூறுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், பாரத் விருது என்பது 1971ம் ஆண்டுக்கு மட்டுமே தவிர வாழ்க்கை முழுவதும் நான் இந்திய துணை கண்டத்தின் சிறந்த நடிகன் என்று பொருள் அல்ல என்று கூறிய மக்கள் திலகம் கலைக்கான ஒரு வரையறையை யாரும் நிர்ணயித்து விட முடியாது. இதை புரிந்து கொண்டால் ஏமாற்றத்திற்கும் அதிர்ச்சிக்கும் பொறாமைக்கும் ஆளாக வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன ஒரே வார்த்தை.. சரித்திரம் படைத்த அஜித்!

மேலும் அப்போது இருந்த திமுக அரசின் சிபாரிசின் பேரில் தான் எம்ஜிஆருக்கு பாரத் பட்டம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மக்கள் திலகம் பாரத் விருதை திருப்பி அனுப்பி வைத்தார். எனக்கு விருது முக்கியமல்ல என் மீது பற்றும் பாசமும் வைத்திருக்கும் அன்பான ரசிகர்கள் எனக்கு போதும் என்று கூறினார் மக்கள் திலகம் எம்ஜிஆர். திரைப்படத்தின் மூலம் நல்ல பாடல்கள் மற்றும் நல்ல கருத்துக்களை சொல்ல விரும்புகிறேனே தவிர நான் ஒருபோதும் விருதுகள் கிடைக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் நான் நடித்ததே கிடையாது என்று மக்கள் திலகம் எம்ஜிஆர் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததை கவனத்தில் கொண்டு மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதையும் நடிகர் எம் ஜி ஆர் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.