ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையிலும் கலக்கி வருபவர் பாலா. காமெடி ரியாலிட்டி ஷோக்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து இன்று சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், நடிகராகவும் பன்முகம் காட்டி வருகிறார் பாலா.
ஆனால் பாலாவிற்கு மற்றொரு முகம் உள்ளது என்பதை கடந்த சில ஆண்டுகளாக அவர் செய்த உதவிகளே அவரை அடையாளப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கிக் கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து பாலா பலருக்கும் உதவிகள் செய்து வந்தார். மேலும் ஆசிரமம் ஒன்றையும் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் சென்னையையே பதம்பார்த்த மிக்ஜாம் புயலால் ஏராளமனோர் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசும் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கியது. இருப்பினும் சமூக ஆர்வலர்கள் பலர் களத்தில் இறங்கினர். அந்த வகையில் பாலாவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக களத்தில் இறங்கினார். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் நேரிடையாகவே சென்று அங்கிருந்த மக்களுக்கு தலா ரூ. 1000 வழங்கி நிவாரணப் பொருட்களையும் கொடுத்தார்.
“என் மனைவிக்கு நான் ஒண்ணும் ஓனர் இல்ல“ : கீர்த்தி பாண்டியன் பற்றி அசோக் செல்வன்
மேலும் அறந்தாங்கி நிஷாவும் தனது பங்கிற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேருதவி புரிந்தார். இந்நிலையில் கடந்த வாரம் நெல்லை, தூத்துக்குடியிலும் கனமழையால் பாதிக்கப்பட்டு பலர் வாழ்வாதாரம் இழந்த நிலையில் அவர்களுக்கும் உதவி செய்வீர்களா என்ற கேள்விக்கு பாலா பதில் கூறுகையில், “என்னிடம் இருந்த பணம் ரூ.5 இலட்சம் தான். அந்தப் பணத்தை சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்திற்காக செலவழித்து விட்டேன். தற்போது நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. ஆனால் தற்போது என்னிடம் பணம் இல்லை. கொஞ்சம் பணம் சேர்த்தவுடன் விரைவில் அங்குள்ள மக்களுக்கும் என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்“ என்றார் பாலா.
தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் துன்பத்தின் போது பிறருக்கு உதவும் பாலாவின் இந்த மனிதாபிமான குணம் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத் துறையில் இருக்கும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.