அன்னபூரணி முதல் ஃபைட் கிளப் வரை சமீபத்திய படங்கள் தோல்வியடைய என்ன காரணம்? ப்ளூ சட்டை மாறன் விளக்கம்!

By Sarath

Published:

ஜெயிலர் மற்றும் லியோ படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் வசூல் ரீதியாக ஏன் தோல்வியை தழுவி வருகின்றன என்பதற்கான விளக்கத்தை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 90 சதவீத படங்கள் தோல்வி அடைய முக்கிய காரணமே இவரது விமர்சனம் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் வெளியான நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி, ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் திரைப்படம், கடந்த வாரம் வெளியான காஞ்சுரிங் கண்ணப்பன், ஃபைட் கிளப் மற்றும் கண்ணகி உள்ளிட்ட படங்கள் ஏன் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

அன்னபூரணி முதல் கண்ணகி வரை ஃபிளாப்:

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75-வது படமான அன்னபூரணி படத்தை இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். அந்த படத்தில் சத்யராஜ், ஜெய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். இந்தியாவிலேயே சிறந்த சமையல் வல்லுனராக நயன்தாரா மாறுவது போன்ற கதையில் உருவாகியிருந்தாலும் கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக அந்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்த பார்க்கிங் திரைப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட நிலையிலும் அதே மிக்ஜாம் புயல் தான் இந்த படத்தின் வசூலுக்கும் வேட்டு வைத்துவிட்டது எனக் கூறியுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்:

மேலும், ஏஜிஎஸ் தயாரிப்பில் சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்த காமெடி பேய் படமான காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படம் படு தோல்வியை சந்திக்க அந்தப் படத்தின் ஹீரோ சதீஷ் தான் காரணம் என போட்டுத் தாக்கியுள்ளார்.

கடந்த வாரம் வெளியான ஃபைட் கிளப் திரைப்படம் அவுட் டேட்ட ஆன கஞ்சா கதையை வைத்து எடுத்த நிலையில் டிசாஸ்டர் ஆகிவிட்டது என லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் செய்து உரியடி விஜயகுமார் நடித்த ஃபைட் கிளப் படத்தையும் கழுவி ஊற்றி உள்ளார்.

கடைசியாக கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், மறைந்த நடிகர் மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் புரட்சிகரமாக வெளியான கண்ணகி திரைப்படம் மேக்கிங் சரியாக இல்லாததால் படு தோல்வியை சந்தித்து விட்டதாக ப்ளூ சட்டை மாறன் தற்போது பதிவிட்டுள்ளார். ஆயுத பூஜைக்கு கடைசியாக வெளியான லியோ படத்திற்கு பிறகு தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் ஜப்பான் படம் பிளாப் ஆன நிலையில், ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மட்டும் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சற்றே தப்பித்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் பொங்கலுக்கு வெளியாக காத்திருக்கும் அயலான், கேப்டன் மில்லர், அரண்மனை 4 மற்றும் ரஜினிகாந்த் கேமியோ வாக நடித்துள்ள லால் சலாம் உள்ளிட்ட திரைப்படங்களில் எந்த படம் ஓட போகிறது, எது வசூல் பேட்டை நடத்தப் போகிறது என்பதை பொருத்திருந்து காண்போம்.