மலையாளத்தில் படு தோல்வி… தமிழில் மெகா வெற்றி.. காரணமே இந்த வில்லன் நடிகர்தானாம்…!

By Sankar Velu

Published:

ஒரு படத்தின் வெற்றி அந்தப்படத்தின் கதையில் தான் இருக்கிறது. அந்தக் கதையும் கூட எப்படி சொல்லப்பட்டுள்ளது என்பதை வைத்துத் தான் படம் வெற்றி அடைகிறது. அதற்கு தான் படத்தின் திரைக்கதை முக்கியம் என்கிறார்கள்.

காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பு, யூகிக்க முடியாத கதைகளம் என்ற இந்த இரண்டும் இருந்து கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பையும் நடிகர்கள் கொடுத்துவிட்டால் படம் பிளாக் பஸ்டர் ஹிட் தான்.

சில படங்களில் கதாநாயகர்களை விட வில்லன்கள் ஒரு படி மேலாக போய் அசத்தலான நடிப்பைக் கொடுத்துவிடுவார்கள். அந்த வகையில் நாம் மறக்கமுடியாத வில்லன் யார் என்றால் அவர் ரகுவரன் தான். இவரது படங்களே அதற்கு சாட்சி.

பாட்ஷா படத்தில் எல்லாம் ரஜினிக்கே சவால் விடும் வகையில் சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பழைய படங்களை எடுத்துக் கொண்டாலும் இப்படித்தான் இருக்கும். அவரது கதாபாத்திரத்தில் ஒரு மிடுக்கு, ஆளுமை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

அந்த வகையில் அவர் மலையாளம் ரீமேக் படம் ஒன்றில் தமிழில் நடித்து செம மாஸ் ஹிட் ஆனது. அதே நேரம் இதன் அசல் மலையாளப்படம் அந்த அளவிற்குப் பேசப்படவில்லை.

பூவினும் புதிய பூந்தென்னல் என்ற படம் தான் அது. கேரள சூப்பர்ஸ்டார் மம்முட்டி நடித்தது. அங்கு வில்லனாக சுரேஷ்கோபி நடித்திருந்தார். தமிழில் மம்முட்டியாக சத்யராஜூம், சுரேஷ் கோபிக்கு ரகுவரனும் நடித்திருந்தனர்.

Poovizhi vasalile
Poovizhi vasalile

கதை என்னன்னா வில்லன் பணக்காரன். அவனது மனைவி கள்ளக்காதல் செய்கிறாள். இது அவனுக்குத் தெரிந்துவிட தனது அடியாள் வைத்து அந்தக் கள்ளக்காதலனைக் கொலை செய்கிறான். இந்தக் கொலையை ஒரு குழந்தையும், தாயும் பார்த்துவிட கொலைகாரன் அவர்களைத் துரத்துகிறான். அவர்கள் தப்பி ஓடுகிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள்? யாரும் காப்பாற்றினார்களா என்பது தான் கதை.

கதையில் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியானது. அதுதான் பூவிழி வாசலிலே. பாசில் இயக்கியுள்ளார். இளையராஜா இசையால் மிரட்டியுள்ளார். இந்தப்படத்தில் சுரேஷ்கோபியை மாதிரி வராமல் விலை உயர்ந்த கோட், சூட்டுகளில் வருகிறார் ரகுவரன்.

அவரது மனைவி கள்ளக்காதலில் சிக்க வேண்டும் என்றால் இவரிடம் ஏதாவது குறை இருக்க வேண்டும் அல்லவா? அதனால் மாற்றுத்திறனாளி போல கையில் க்ரட்ச் பொருத்திக்கொண்டு ஸ்டைலாக நடந்து வருகிறார் ரகுவரன். முகத்தில் கோபமும், வெறுமையும் தாண்டவமாடும். மேல்தட்டு மக்களின் ஸ்டைலில் அது நடக்கக்கூடாது… நடக்கவே கூடாது என ஸ்டைலாக பேசும் வசனத்திற்கு கைதட்டல் விழுகிறது.

மகனை இழந்த சோகத்தை சுமந்து கொண்டு படம் முழுவதும் வருகிறார் சத்யராஜ். இருந்தாலும் அவரது நடிப்பைத் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் ரகுவரன். அந்த அளவு அசத்தலான நடிப்பை ஒரு சில நடிகர்கள் தான் கொடுக்க முடியும். அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாத நடிகர் ரகுவரன் தான்.