85 ரூபாயுடன் சென்னை வருகை.. இளையராஜா வீட்டில் எடுபிடி.. பிரபல இசையமைப்பாளரின் வெற்றிக்கதை..!

By Bala Siva

Published:

85 ரூபாயுடன் சென்னை வந்த ஒருவர் இளையராஜாவின் அலுவலகத்தில் எடுபிடி வேலை பார்த்து, அவரிடமிருந்து இசையை கற்றுக் கொண்டு அதன் பின்னர் தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளராக மாறியவர் இசையமைப்பாளர் பரணி.

இசையமைப்பாளர் பரணி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சிறு வயதிலேயே தனது வீட்டை விட்டு சென்னைக்கு வந்துவிட்டார். அப்போது அவரிடம் வெறும் 85 ரூபாய் தான் இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் திரை உலகில் பாடகிகளாக மாறிய நடிகைகள் யார் யார் தெரியுமா?

சென்னை வந்த போது அவர் சில நாட்கள் பிளாட்பாரத்தில் படுத்து இருந்த நிலையில் அதன் பின் ஒருவரின் பழக்கம் காரணமாக டீக்கடையில் வேலை பார்த்தார். இந்த நிலையில்தான்  இளையராஜாவை எப்படியாவது பார்த்து அவரிடம் வேலை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தார்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் இளையராஜாவின் வீட்டில் காத்திருந்த நிலையில்தான் அவருக்கு இளையராஜா வீட்டில் வேலை கிடைத்தது. இளையராஜா அலுவலகத்தில் முதலில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருந்த அவர், அங்கே இருப்பவர்கள் எல்லாம் இசையமைப்பது, கம்போஸ் செய்வது, பாடல் எழுதுவது ஆகியவற்றை கூர்ந்து கவனித்தார்.

அப்போதுதான் தனக்கும் பாடல் எழுத வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் கிட்டத்தட்ட ஐந்து வருடம் இளையராஜாவிடம் வேலை பார்த்த நிலையில்தான் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அப்போது விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு என்ற படத்தில்  இரண்டு பாடல்கள் எழுத பரணிக்கு எஸ்.ஏ.சி வாய்ப்பு கொடுத்தார். அந்த பாடல்கள் மட்டுமின்றி அந்த படமே சுமாரான வெற்றி பெற்றது.

இதனை அடுத்து மீண்டும் அவர் இளையராஜாவிடம் வேலை பார்த்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான பெரியண்ணா என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அவரது உண்மையான பெயர் குணசேகரன் என்று இருந்த நிலையில் திரைப்படத்திற்காக அவருக்கு பரணி என்ற பெயரை எஸ்.ஏ.சிதான் வைத்தார். பெரியண்ணா படத்தில் இடம் பெற்ற பாடல்கள் நல்ல ஹிட் ஆகியது. குறிப்பாக ‘நிலவே நிலவே’ என்ற பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது.

bharani2

இசையமைப்பாளர் பரணியை தமிழகம் முழுவதும் பேச வைத்த படம் என்றால் அது ‘பார்வை ஒன்றே போதுமே’ என்ற படம்தான். குணால், மோனல், கரண் நடித்த இந்த படத்தில் இடம்பெற்ற ஏழு பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. ‘மழைத்துளி’, ‘நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காமல் போனாலும்’, ‘திருடிய இதயத்தை’, ‘திரும்ப திரும்ப’ ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியது. பட்டி தொட்டி எங்கும் அந்த பாடல்கள் புகழ் பெற்றது.

தமிழ் திரையுலகில் ஜெயித்த அண்ணன் – தம்பி நடிகர்கள்.. இவ்வளவு பெரிய லிஸ்ட்டா?

இதனை அடுத்து பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின், குணால் நடித்த பேசாத கண்ணும் பேசுமே, முரளி, வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்தார். இந்த படங்கள் வசூல் அளவிலும் ஓரளவு வெற்றி பெற்றது. அதன் பிறகு சில படங்களுக்கு இசையமைத்தவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு பரணி இசையமைத்துள்ளார். எந்தவிதமான இசை அறிவும் இல்லாமல் அடிப்படை இசையை பயின்று கொள்ளாமல் இளையராஜா வீட்டில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து, வெறும் கேள்வி ஞானத்துடன் அவர் பாடல்களை கம்போஸ் செய்து இசையமைப்பாளராக ஆனார் மற்றும் அதேபோல் பாடல் ஆசிரியராக ஆனார்.

முதல் மரியாதை: படம் ஓடாது என கைவிட்ட படம்.. ஆனால் தன்னம்பிக்கையுடன் ஜெயித்த பாரதிராஜா..!

கடந்த ஆண்டு வெளியான ‘மெய்ப்பட செய்’ என்ற திரைப்படத்திற்கு பரணி இசையமைத்திருந்தார். இன்னும் தனக்கான வாய்ப்பு கிடைத்தால்தான் இசையில் சாதிக்க முடியும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் இசையமைப்பாளர் பரணி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.