பிரபல தயாரிப்பாளர் ஒருவர் முதல் படத்திலிருந்து ஆறாவது படம் வரை மிகப்பெரிய வெற்றி படமாக தயாரித்த நிலையில் இந்த ஆறு படங்களுக்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்தார். இந்த நிலையில் இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து அவரிடம் இருந்து பிரிந்த பின்னர் தயாரித்த ஒரு சில படங்கள் தவிர அனைத்து படங்களும் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரை உலகின் கடந்த 80களில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மதர்லேண்ட் பிக்சர்ஸ். இந்த நிறுவனத்தை கோவைத்தம்பி என்பவர் நடத்தி வந்தார். அவர் கடந்த 1982ஆம் ஆண்டு முதல் படமாக பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தை தயாரித்தார்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சென்னை, மதுரை போன்ற நகரங்களில் 300 நாட்கள் ஓடி சாதனை செய்தது. இதனை அடுத்து இவர் தயாரித்த இளமை காலங்கள், நான் பாடும் பாடல், உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், இதய கோவில் ஆகிய ஆறு திரைப்படங்களில் இதய கோவில் தவிர மற்ற அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டானது. இதய கோயில் சுமாரான வெற்றி பெற்றது.
இந்த ஆறு படங்களிலும் மோகன்தான் நாயகன். இசைஞானி இளையராஜா தான் இசையமைப்பாளர். இந்த நிலையில்தான் இளையராஜாவுக்கும் கோவைத்தம்பிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து இருவரும் பிரிந்தனர். இதயகோயில் படத்திற்கு அடுத்ததாக மோகன், நதியா நடித்த உயிரே உனக்காக என்ற படத்தை கோவைத்தம்பி தயாரித்தார். இதற்காக அவர் பாலிவுட் திரையுலகில் இருந்து பிரபல இசையமைப்பாளர்கள் லட்சுமி காந்த் – பியாரிலால் இரட்டையர்களை சென்னைக்கு வரவைத்து தனது படத்திற்கு இசையமைக்க வைத்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதன் பிறகு அவர் தயாரித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும், மண்ணுக்குள் வைரம், மங்கை ஒரு கங்கை, உழைத்து வாழ வேண்டும் ஆகிய படங்கள் வரிசையாக தோல்வி அடைந்தன. இதனை அடுத்து நான்கு வருடங்கள் இடைவெளி விட்டு அவர் ‘உன்னை வாழ்த்தி பாடுகிறேன்’ என்ற திரைப்படத்தை தயாரித்தபோது அவர் மீண்டும் இளையராஜாவுடன் சமரசம் செய்து கொண்டதால் இந்த படத்திற்கு மீண்டும் இளையராஜா இசையமைத்திருந்தார். ஆனால் இந்த படமும் சரியாக போகவில்லை.
இதனை அடுத்து மீண்டும் இசைஞானி இளையராஜா இசையமைத்த செம்பருத்தி என்ற படத்தை தயாரித்தார். ஆர்கே செல்வமணியின் 3வது படமான அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதனை அடுத்து கோவைத்தம்பி அரசியலில் பிஸியானதால் சினிமாவிலிருந்து விலகினார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 2014ஆம் ஆண்டு உயிருக்கு உயிராக என்ற படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படமும் தோல்வி அடைந்தது.
தயாரிப்பாளர் கோவைத்தம்பி எம்.ஜி.ஆரின் மீது மிகுந்த அன்புடையவர். அவர் திமுகவிலிருந்து விலகி அண்ணா திமுக கட்சியை ஆரம்பித்தபோது அதில் இணைந்தார். கடந்த 1980 முதல் 84ஆம் ஆண்டு வரை அவர் பேரூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் அவர் அதிமுகவிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.