நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தெய்வமகன் என்ற திரைப்படம் கடந்த 1961ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் முதல் முதலாக ஆஸ்கர் விருதுக்கு சென்ற தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது. ஆனால் ஆஸ்கர் நிர்வாகிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்தவர் ஒரே நடிகர் இல்லை என்று நம்ப மறுத்ததாக கூறப்பட்டது.
சிவாஜி கணேசன், ஜெயலலிதா, மேஜர் சுந்தர்ராஜன், எம்.என்.நம்பியார், நாகேஷ், நாகையா உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் தெய்வமகன். ஏற்கனவே ’பலே பாண்டியா’ என்ற படத்தில் மூன்று வேடங்களில் சிவாஜி நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவரது மூன்று வேடங்களும் மூன்று வித்தியாசமான வேடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முகத்தில் கோரமாக இருக்கும் அப்பா முதல் காட்சியில் தனக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக ஆர்வத்துடன் வருவார். ஆனால் அந்த குழந்தையும் தன்னை போலவே முகத்தில் கோரமாக இருப்பதை பார்த்ததும் நான் பட்ட அவமானங்கள் அந்த குழந்தையும் பட வேண்டாம், அதனால் அந்த குழந்தையை கொன்றுவிடு என்று டாக்டர் மேஜர் சுந்தர்ராஜனிடம் கூறுவார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வரும், அதன் பிறகு மேஜர் சுந்தர்ராஜன் அந்த குழந்தையை ஒரு அனாதை இல்லத்தில் கொடுத்து வளர்க்க சொல்வார். அதன்பிறகு சிவாஜி – பண்டரிபாய் தம்பதிக்கு மீண்டும் ஒரு அழகிய ஆண் குழந்தை பிறக்கும். அப்பா இரண்டு மகன்கள் என மூன்று வித்தியாசமான வேடங்களில் சிவாஜி கலக்கி இருப்பார்.
கர்வம், அலட்சியம், திமிர் போன்ற குணங்களை கொண்ட அப்பா சிவாஜி நடிப்பில் மிரட்டி இருப்பார் என்றால் ஆசிரமத்தில் முரட்டுத்தனமாக அதே நேரத்தில் சாந்தமாகவும் இசை கலைஞராகவும் வளரும் மூத்த பையனாக வளரும் இன்னொரு சிவாஜி கண்கலங்க வைத்திருப்பார். அதேபோல் மூன்றாவதாக அழகு மற்றும் காதல் துள்ளலுடன் கூடிய கேரக்டரில் ஒரு சிவாஜி நடித்திருப்பார்.
ஒரு பக்கம் இளைய மகன் சிவாஜி நம்பியாரிடம் பணத்தை ஏமாந்து ஏராளமான நஷ்டம் அடைந்திருப்பார், இன்னொரு பக்கம் மூத்த மகன் சிவாஜியை எடுத்து வளர்த்த நாகையா இறந்துவிட , இறக்கும் சமயத்தில் அவர் மூத்த மகன் சிவாஜியுடைய பிறப்பின் ரகசியத்தை தெரிவிப்பார். உடனே அவர் தனது தந்தையை பார்க்க வருவார்.
ஒரு பக்கம் இளைய மகன் சிவாஜி நம்பியாரிடம் மாட்டிக் கொண்டிருப்பதை அறிந்த அப்பா சிவாஜி அவரை காப்பாற்ற புறப்படுவார். அப்போது அவரை பார்க்க வரும் மூத்த மகன் சிவாஜி ‘நான் போய் தம்பியை அழைத்துக்கொண்டு வருகிறேன்’ என்று பொறுப்பை எடுத்துக் கொள்வார். முடியாது நான் தான் போகிறேன் என்று அப்பா சிவாஜி சொல்ல, இதுவரை இல்லாமல் போன நான் கடைசி வரை இல்லாமல் போனாலும் பரவாயில்லை என்று கூறி தம்பியை காப்பாற்ற கிளம்புவார். தம்பியை கடும் சண்டை போட்டு காப்பாற்றும் அவர், தம்பியை காப்பாற்றிவிட்டு துப்பாக்கி குண்டுக்கு இறந்து விடுவதுடன் படம் முடிவடையும்.
ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?
மூன்று கேரக்டர்களில் மிக அருமையாக சிவாஜி நடித்தார் என்றால் பண்டரி பாய், மேஜர் சுந்தர்ராஜன் ஆகிய இருவரும் சிவாஜிக்கு இணையாக நடித்திருப்பார்கள். இளைய மகன் சிவாஜியை காதலிக்கும் கேரக்டரில் ஜெயலலிதா நடித்திருப்பார் என்றாலும் அவருக்கு பெரிய அளவில் நடிப்புக்கான ஸ்கோப் இருக்காது.
மூத்த மகன் சிவாஜி ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவை காதலிக்க, அவர் தனது தம்பியை காதலிக்கிறார் என்றவுடன் ஏமாற்றத்துடன் காதலை மனதுக்குள்ளே அழித்துவிடும் காட்சி மிகவும் அருமையாக உருவாக்கப்பட்டிருக்கும்.
சிவாஜி கணேசனின் சாந்தி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். சிவாஜியை வைத்து பல திரைப்படங்கள் இயக்கிய ஏ.சி.திருலோகசந்தர்தான் இந்த படத்திற்கும் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இந்த படம் ஆஸ்கார் விருதுக்காக சென்ற முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது. ஆனால் ஆஸ்கார் நிர்வாகிகள் இந்த படத்தைப் பார்த்து மூன்று கேரக்டரில் நடித்தது ஒரே நடிகர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதாகவும் இங்கிருந்து சென்ற பட குழுவினர் அதை சரியாக விளக்கத் தவறியதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
படம் வெளியான மூன்றே நாளில் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்.. ‘வசந்த மாளிகை’ படத்தின் அறியாத தகவல்..!
மொத்தத்தில் ஆஸ்கார் விருது கிடைக்க விட்டாலும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு பெற்றதால் இந்த படம் சூப்பர் ஹிட்டானது.