Ambika: தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் ஹீரோக்கள் பலரும் கொடி கட்டிப் பறந்த போது சில நடிகைகள் தங்களின் திறன் காரணமாக தாங்களும் சளைத்தவர்கள் என்பதையும் நிரூபித்திருந்தார்கள்.
அந்த லிஸ்ட்டில் நடிகைகள் ஸ்ரீதேவி, நதியா, ரேவதி, அம்பிகா, ராதா, ராதிகா, அமலா, நளினி என பலரை சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பலரும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என டாப் ஹீரோக்களாக இருந்த பல நடிகர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். அந்த வகையில், மிகவும் குறிப்பிடத்தக்க நடிகை தான் அம்பிகா.
இவரது சகோதரியான ராதாவும் சினிமா நடிகையாக இருந்த சூழலில், இருவரும் இணைந்து கூட சில திரைப்படங்களில் நடித்துள்ளனர். கேரளாவை சேர்ந்த நடிகை அம்பிகாவுக்கு சிறு வயது முதலே நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. குழந்தை நட்சத்திரமாக நடித்த அம்பிகா, மலையாள திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானதையடுத்து தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட அம்பிகா, ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து இழுத்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் என தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமில்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென் இந்திய சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்த பெருமை உடையவர் நடிகை அம்பிகா. உடன் நடிப்பது யாராக இருந்தாலும் அவருடன் பொருத்தமாக ஜோடி சேரும் கச்சிதம் அம்பிகாவிடம் இருந்ததால் அவர் கொடி கட்டிப் பறந்தார்.
அப்படி இருக்கையில், ஒரே சமயத்தில் தந்தை மற்றும் மகன் என இரண்டு பேருக்கும் ஜோடியாக அம்பிகா நடித்தது பற்றிய தகவலை தற்போது காணலாம். தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என அறியப்படுபவர் செவாலியர் சிவாஜி கணேசன். இவருடன் இணைந்து ‘வாழ்க்கை’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை அம்பிகா. இந்த திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக அவர் நடித்த சமயத்தில் ஒரு சலசலப்பு உருவாகி இருந்தது.
சிவாஜிக்கும், அம்பிகாவுக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருந்த சூழலில், சற்று வயதான தோற்றத்தில் அம்பிகா நடிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்படி நடித்தால் அம்பிகாவின் மார்க்கெட் அடிபடும் என்றும், இளம் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் குறையும் என்றும் பரவலாக ஒரு தகவல் இருந்தது. ஆனால், அதை எல்லாம் கேட்டுக் கொள்ளாமல் சிவாஜியுடன் அம்பிகா இணைந்து நடித்த நிலையில் அந்த திரைப்படம் பெரிய வெற்றியையும் பெற்றது.
வாழ்க்கை திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அதே சமயத்தில், சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபுவுடனும் இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார் அம்பிகா. இந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட்டானதும் குறிப்பிடத்தக்கது.