“நாடு தோத்திருச்சே..“ X தளத்தில் புலம்பித் தீர்த்த செல்வராகவன்

By John A

Published:

நேற்றைய தினம் ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவும் உடைந்து சுக்கு நூறாகிப் போன தருணம். ஒவ்வொரு இந்தியனும் வெற்றிக் களிப்பில் மகிழ வேண்டிய தருணம் கனவாகிப் போனது. 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா ஏற்று நடத்தியது. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் காட்டி ரசிகர்களுக்கு புல்லரிக்கச் செய்தனர் இந்திய அணி வீரர்கள்.

ஆனால் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சமபலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் மோதி இறுதியில் கோப்பைக் கனவைத் தகர்த்து விட்டனர். இந்திய அணியின் தோல்வி ஒவ்வொரு இந்தியனையும் மிக சோர்வடைய வைத்துவிட்டது. பலர் அழுதனர். ஏனெனில் மிகவும்  குட் பார்மில் இருந்த இந்திய அணி நேற்றைய போட்டியில் சொதப்பி விட்டது.

இறுதியில் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்ற எண்ணிலடங்கா இந்திய இதயங்கள் நொறுங்கின. பிரதமர் மோடி முதல் சாமானியக் குடிமகன் வரை எதிர்பார்த்த கோப்பைக் கனவு தகர்ந்தது. ஒவ்வொருவரும் சமூக வலைதளங்களில் இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்க இயக்குநர் செல்வராகவன் சற்று எமோஷனலாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், “நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது“ என்று எமோஷனலாகப் பதிவிட்டிருந்தார்.

நடிப்புக்கு குட் பை சொல்லப் போகிறாரா அதிதி ஷங்கர்? : வெளியான வைரல் புகைப்படம்

தன்நாடு தோற்றுவிட்டதே என்று எண்ணி உணர்ச்சிப் பெருக்குடன் அவர் போட்ட இந்த போஸ்ட் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. செல்வராகவனுக்கு இப்படி ஒரு தேசப்பற்றா என அவரின் ரசிகர்கள் கமெண்ட்களில் அவருக்கு ஆறுதல் சொல்லியும், பாராட்டியும் பதிவிட்டுவருகின்றனர்.

இதேபோல் பிரதமர் மோடியும் இந்திய அணி வீரர்களைப் பாராட்டி என்றும் எப்போதும் உங்களுடன் துணை நிற்போம் என்று பதிவிட்டிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினும் இந்திய அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார். இதில் ஆஸ்திரேலிய அணிக்கு 33 கோடி பரிசுத் தொகையும், இந்திய அணிக்கு 16 கோடி பரிசுத் தொகையும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.