தான் நடிக்கும் முதல் படத்திலேயே பெயர் எடுத்து கவனம் பெறும் நடிகர்கள் இங்கே ஏராளம். அவர்கள் பிரபலம் அடைவதுடன் மட்டுமில்லாமல் எந்த படம் தங்களுக்கு புகழ் கொடுத்ததோ அதன் பெயரை தங்கள் பெயருடனும் இணைத்துக் கொள்வார்கள். ஜெயம் ரவி, தலைவாசல் விஜய் என பல நடிகர்களை உதாரணத்திற்கு சொல்லி விடலாம். அந்த வகையில் மிக முக்கியமான ஒரு நடிகர் தான் நிழல்கள் ரவி.
பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘நிழல்கள்’ என்ற திரைப்படத்தில் தான் ரவி முதலில் அறிமுகமானார். இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் ராஜசேகரன் மற்றும் ரோகினி நடித்த நிலையில் ரவியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படத்தின் காரணமாக தான் அவருக்கு ‘நிழல்கள்’ ரவி என்ற பெயரும் உருவானது.
முதல் படமே சூப்பர் ஹிட் படம் என்பதால் அவருக்கு அடுத்தடுத்த படங்களில் நல்ல கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நிழல்கள் படத்தை அடுத்து கடல் மீன்கள், மஞ்சள் நிலா, தாய் முகாம்பிகை, நினைவெல்லாம் நித்யா, ஊரும் உறவும், மண்வாசனை, சாட்சி, தம்பிக்கு எந்த ஊரு, ராஜா வீட்டு கண்ணு குட்டி உள்பட பல படங்களில் நடித்தார். அவர் நடித்த பெரும்பாலான கேரக்டர்கள் வில்லன் மற்றும் குணச்சித்திரம் என்ற வகையில் தான் அமைந்திருந்தது.
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். வாழ்க்கை என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் மகனாக நடித்துள்ளார். அதேபோல் ரஜினியுடன் படையப்பா படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். ஸ்ரீ ராகவேந்தர் படத்தில் அவரது கேரக்டர் குறிப்பிடும் வகையில் இருக்கும்.
கடந்த 1978 ஆம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த நிழல்கள் ரவி 45 வருடங்களில் கிட்டத்தட்ட 550 படங்கள் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நிழல்கள் ரவி, ஒரு மிகச் சிறந்த டப்பிங் கலைஞர் என்பதும் பலரும் அறியாத உண்மை.
புதுப்புது அர்த்தங்கள் என்ற பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் ரகுமானுக்கு குரல் கொடுத்தவர் இவர்தான். அதேபோல் கேப்டன் மகள் என்ற படத்தில் ராஜாவுக்கும், பொம்மலாட்டம் திரைப்படத்தில் நானா படேகருக்கும் குரல் கொடுத்தார். சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்மரெட்டி என்ற படத்தில் அமிதாபச்சனுக்கு குரல் கொடுத்த இவர், பிகில் படத்தில் ஜாக்கி ஷெராப், காப்பான் படத்தில் பொம்மன் இரானிக்கு குரல் கொடுத்துள்ளார்.
கன்னடத்தில் இரண்டு பாகங்களில் உருவாகி இரண்டுமே பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் தான் கேஜிஎஃப். இதன் முதல் பாகத்தில் ராக்கி பாயின் கதையை சொல்லும் கதாபத்திரத்தில் ஆனந்த் நாக் நடித்திருப்பார். அவருக்கு தமிழில் டப்பிங் கொடுத்ததும் நிழல்கள் ரவி தான். அந்த கணீர் குரல், எந்தவித மாஸான வீடியோக்கும் செட் ஆகும் வகையில் மிக பிரம்மாண்டமாக இருக்கும்.
நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நல்லதோர் வீணை, பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ரயில் சினேகம் தொடர்களில் நடித்தார். இதனை அடுத்து காசளவு நேசம், அலைகள், தென்றல், சூரியபுத்திரி 2 உள்பட பல சீரியல்களை நடித்தார். தெலுங்கிலும் சில சீரியல்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில வெப் தொடரிலும் இவர் நடித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் நடிகர், டப்பிங் கலைஞர் என இரண்டு துறைகளிலும் தனது திறமையை நிரூபித்தவர் நிழல்கள் ரவி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிழல்கள் ரவிக்கு 67 வயது ஆகிய போதிலும் இன்னும் அவர் திரையுலகில் தனக்கென சில கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
2023 ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 2, போர் தொழில், மார்க் ஆண்டனி, ரத்தம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு பாலச்சந்தர் உட்பட பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்த நிழல்கள் ரவியின் நடிப்பு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.