இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சம்பளத்தில் கைவைத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்!

By Velmurugan

Published:

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. முன்னணி ஹீரோக்களை வைத்து கோடிக்கணக்கில் முதலீடுகள் செய்து மாபெரும் ஹிட் படங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஒன்று. மற்ற தயாரிப்பு நிறுவனங்களைப் போல அல்லாமல் சன் பிக்சர்ஸ் தனக்கென சில விதிமுறைகளை வைத்து தான் படங்களை ஒப்புக்கொண்டு வருகிறது.

அதற்கு உதாரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தர்பார் திரைப்படம் வெளியாகி இருந்தது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரஜினிக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த திரைப்படத்திற்காக ரஜினிக்கு நூறு கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து ரஜினி அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திற்கு 105 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில் இந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

முன்னணி நடிகராக இருந்த போதும் சூப்பர் ஸ்டாரின் இரண்டு தோல்வி படங்களை கணக்கில் எடுத்துக்கொண்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு 70 கோடி மட்டுமே சம்பளமாக பேசியிருந்தது.

ஆனால் ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றியையும் நல்ல விமர்சனத்தையும் பெற்றுக் கொடுத்தது. இந்த கொண்டாட்டத்தின் மறுபக்கமாக தயாரிப்பு நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு பிரம்மாண்ட காரை பரிசாக வழங்கியது. மேலும் 10 கோடி பரிசுத்தொகையையும் வழங்கி ரஜினிக்கு உரிய மரியாதையை கொடுத்தது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 வது திரைப்படம் அடுத்ததாக உருவாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தை விட வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெறத் தவறியது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகனாக இருந்து கொண்டு அஜித்தை புகழ்ந்து தள்ளும் ராகவா லாரன்ஸ்!

லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாதையில் இருந்த சில குறைகளை ஒப்புக்கொண்ட லோகேஷ் இந்த திரைப்படத்திற்காக 55 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார். அடுத்ததாக ரஜினியின் திரைப்படத்திற்கு 70 கோடி வரை சம்பளமாக முதலில் பேசப்பட்டு இருந்தது. லியோ திரைப்படத்தின் கலவையான விமர்சனத்தை தொடர்ந்து சம்பளத்தை அதிகரிப்பது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை.அதற்கு பதிலாக அதை 55 கோடி சம்பளம் கொடுக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது. இது குறித்து லோகேஷ் இறுதியான முடிவு ஏதும் தெரிவிக்காத நிலையில் உறுதியான தகவல் வெளியாகும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.