யங்ஸ்டருக்கு இவர விட்ட வேற யாரு? ஹேப்பி பர்த்டே வெங்கட் பிரபு

By Nithila

Published:

ஒவ்வொரு இயக்குனர்களும் தங்களுக்கென்று ஒரு மேக்கிங் ஸ்டைலை கொண்டிருப்பார்கள். அதில் வெங்கட்பிரபுவின் படங்கள் பாய்ஸ் ஃபன் வகையைச் சார்ந்தது. நண்பர்கள் கூட்டணியில் நடக்கும் கலட்டா என படத்தின் கதை பயணிக்கும்.

இளைஞர்களை கவரும் அம்சங்களை மட்டுமே மனதில் வைத்து வெங்கட்பிரபு இயக்கும் படங்களுக்கு அவருக்கென்று ரசிகர் கூட்டம் பெருமளவில் உள்ளது. ஆரம்பத்தில் வெங்கட் பிரபுவுக்கு இயக்குனராக வேண்டுமென்ற தூண்டுதல் இருந்ததாக தெரியவில்லை.

அவருடைய தந்தை இசையமைப்பாளர் கங்கை அமரனும் மகன்கள் சினிமாவுக்கு வரக்கூடாது. நல்ல முறையில் படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். கங்கை அமரனின் நண்பரான பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் வெங்கட்பிரபுவை லண்டனில் படிக்க அனுப்பி இருக்கிறார்.

படித்து முடித்து இந்தியா வந்த பின், அவருடைய உறவினரான யுவன் சங்கர் ராஜா, தம்பி பிரேம்ஜியுடன் இணைந்து சிறு சிறு விடியோக்களை தயார் செய்தும், அதில் தங்களே நடித்துக் கொண்டும் இருந்திருக்கின்றனர். பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் வெங்கட்பிரபு.

2002ம் ஆண்டு ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பெரும்பாலும் துணைக் கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். அஜித்துடன் ‘ஜி’, எஸ்.பி.பி சரணுடன் ‘உன்னை சரணடைந்தேன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். பின் வெங்கட் பிரபு இயக்குனராக களமிறங்கிய படம் சென்னை-28.

அந்தப்படத்தை எஸ்.பி.பி சரண் தயாரித்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு மேலும் பக்க பலமாக அமைந்தது. ஜெய், சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி மேலும் பல இளைஞர்கள் நடித்திருந்த இந்தப்படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டிருந்தது.

இதனால், முதல் படத்திலேயே இளைஞர்களை பெருமளவில் கவர்ந்தார் வெங்கட் பிரபு. பின், அஜித்துடன் மங்காத்தா, சிம்புவுடன் மாநாடு என வெற்றிப் படங்களை இயக்கினார். தற்போது தளபதி-68ஐ இயக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார். அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் வெங்கட் பிரபு தயாரித்திருக்கும் படம் ‘நண்பன் ஒருவன் வந்தபிறகு’. இதுவும் இளைஞர் பட்டாளத்தின் கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஹிப் ஆப் ஆதி பாடியிருக்கும் ‘பகோடா’ பாடல் டிரெண்டாகி வருகிறது. அதோடு இன்று பிறந்தநாள் கொண்டாடும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபுவிற்கு படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். இளைஞர்கள் கொண்டாடும் இயக்குனருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.