வெற்றிமாறனின் திரைப்பயணத்தில், திரைக்கு வரும் முன்பே பெரும் எதிர்ப்பார்ப்புக்குள்ளான படம் ‘வட சென்னை’. கேங்க்ஸ்டர் கதை என்பதால், படத்தில் பல முக்கியமான கதாபாத்திரங்களில் பலர் நடித்திருந்தனர். படத்தின் ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார். படத்தின் பிளாஷ் பேக்கில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீர் நடித்திருப்பார்.
அவருடைய கேரக்டர் பெயர் ‘ராஜன்’. படத்தில் வெயிட்டான கதாபாத்திரமாக அமைந்திருந்தது. இயக்குனர் அமீர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அமீர் இயக்கிய முதல் படம் ‘மெளனம் பேசியதே’.
அந்தப்படத்தில் சூர்யா, திரிஷா நடித்திருப்பார்கள். திரிஷா ஹீரோயினாக அறிமுகமான படம் ‘மெளனம் பேசியதே’.
இப்படத்தில் நடித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், இயக்குனருக்கும் நல்ல படமாக அமைந்தது. ‘மெளனம் பேசியதே’ இந்த தலைமுறையினரும் விரும்பக்கூடிய படமாக இருக்கும். அந்த கிளாசிக் வெற்றிக்கு பின் அமீர் இயக்கிய படம் ‘ராம்’. அதுவரை நடிகர் ஜீவா சரியாக படம் அமையாமல் தவித்து வந்தார். அந்த சமயத்தில், ‘ராம்’ அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல கிடைத்தது.
அந்த படத்திற்கு பிறகே ஜீவா கேரியர் உச்சத்தை அடைந்தது. அதன் பின் அமீர் இயக்கிய படம் ‘பருத்தி வீரன்’. கார்த்தியின் அறிமுகப்படமான ‘பருத்தி வீரன்’ மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து படங்களை மட்டுமே இயக்கி வந்த அமீரை, தனுஷ் நடித்த ‘திருடா திருடி’ படத்தின் இயக்குனர் சுப்பிரமணிய சிவா ‘யோகி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
அதன் பின் ஒருசில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார் அமீர். இருப்பினும், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘வட சென்னை’ அமீரை நல்ல நடிகராக அடையாளப்படுத்தியது. அதனால் வெற்றிமாறனும், தான் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் அமீர் நடிப்பதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
அமீரும், சூர்யாவுடன் இணைந்து நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். அமீர் தன்னுடைய முதல் படத்தில் சூர்யாவை இயக்கி அவரிடம் இருந்து நடிப்பை வாங்கி இருக்கிறார். தற்போது அவருடன் இணைந்து நடிக்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது.
சூர்யாவுக்கு, வில்லனாக அமீர் நடிக்க இருப்பதாக பேச்சு நிலவுகிறது. சூர்யா-அமீர் காம்போ ஆக்டிங் எப்படி இருக்கிறது என்று ‘வாடிவாசல்’ படத்தில் பார்க்கலாம்.