சினிமாவில் நுழைய வேண்டும் என்று இன்று ஸ்மார்ட் போன்களில் பலர் ரீல்ஸ்களில் தங்களது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்க ஆரம்ப கால கட்டங்களில் சினிமா வாய்ப்பு என்பது எட்டாக் கனியாகத்தான் இருந்தது. சினிமாகாரர்களுக்கு பொண்ணு கிடையாது, வீடே கிடையாது என்று சொல்லும் அளவில் கையில் ஆல்பத்துடன் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த இளைஞர் கூட்டம் ஏராளம்.
அந்த வகையில் நாள்தோறும் பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களில் புது முக நடிகர் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து குவியும் விண்ணப்பங்கள் அதிகம். அப்படி விளம்பரத்தைப் பார்த்து நடிகராக உருவானவர் தான் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன்.
இயக்குநர் ஸ்ரீதர் வழக்கமான பாணியில் இருந்து காமெடி டிராக்குக்கு மாற தினத்தந்தியில் தன்னுடைய அடுத்த படத்திற்கு புதுமுக நடிகர்கள் தேவை என்ற விளம்பரம் கொடுத்திருக்கிறார். திருச்சியில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் என்னும் இளைஞன் ஒரு நாள் காலை வழக்கம் போல் தினத்தந்தி நாளிதழைப் படிக்கையில் ‘புதுமுக நடிகர்கள் தேவை’ என்ற விளம்பரத்தால் கவரப் பட்டார். நடிக்க விண்ணப்பபிக்க அடித்தது லக். ‘காதலிக்க நேரமில்லை‘ என்னும் மெஹாஹிட் படத்தில் ஹீரோ அரிதாரம் பூச வைத்தார் இயக்குநர் ஸ்ரீதர்.
தமிழில் நான்கே படங்கள்… பாலச்சந்தரின் ஒரே படத்தால் பிரபலமான பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீதர்!
அதன் இமாலய வெற்றிக்குப் பிறகு தமிழ்த் திரைத்துறையில் எங்கோ போய் விட்டார் ரவிச்சந்திரன். அதன்பின் இதயக்கமலம், குமரிப் பெண், அதே கண்கள், கௌரி கல்யாணம், மதராஸ் டு பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு, ஊமை விழிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். ஊமைவிழிகள் படத்தில் இவரது மேனரிசம் பலரையும் பயமுறுத்தியது. மேலும் மானசீகக் காதல், மந்திரன் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். மகன் அம்சவர்தனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். ஆனால் அதன்பின் அவரால் திரையில் ஜொலிக்க முடியவில்லை.
கடைசியாக ரவிச்சந்திரன் நடித்த படம் ஆடுபுலி. கடந்த 2011-ல் சிறுநீரகக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். அவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டங்களில் தினத்தந்தி விளம்பரம் கொடுத்த வாய்ப்பிற்கு நன்றி செலுத்தும் விதமாக அவர் ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினத்தந்தி ஒன்று தினம் காலையில் அவர் வீட்டில் விழுந்து கொண்டே இருந்ததாம்.