தற்போது பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் இன்னொரு பிரபல நடிகர் நடிப்பது என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த காலத்தில் எம்ஜிஆர் படத்தில் சிவாஜியோ அல்லது ஒரு பிரபல நடிகரின் படத்தில் இன்னொரு பிரபல நடிகரோ நடிப்பது என்பது மிகவும் அரிதாக நிகழும்.
அந்த வகையில் விஜயகாந்த் நடித்த படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்த ஒரு படம் உண்டு என்றால் அதுதான் ’மனக்கணக்கு’. கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இயக்குனர் ஆர்சி சக்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் மனக்கணக்கு. கடந்த 1986 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி இந்த படம் வெளியானது.
இந்த படத்தில் விஜயகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக ராதா நடித்திருந்தார். மேலும் ராதாவின் சகோதரி அம்பிகாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ராஜேஷ், சரத்பாபு, மாலாஸ்ரீ, செந்தாமரை உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு இயக்குனர் கேரக்டரில் நடித்திருப்பார். அவர் ஒரு சில காட்சிகளை இயக்குவது போன்ற காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும். இந்த படத்தில் விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் நடிப்பதற்கு முக்கிய காரணம் ராதா மற்றும் அம்பிகா தான். இருவரும் இணைந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இந்த படத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்தார். கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவும் அது தான் காரணம் என கூறப்படுவதுண்டு.
இந்த படத்திற்கு எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. விஜயகாந்த், கமல்ஹாசன், ராதா, அம்பிகா என பல பிரபலங்கள் ஒன்றிணைந்த போதிலும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த படத்தின் கதை என்னவென்றால் காதலித்து கல்யாணம் செய்த ஹீரோ திடீரென ஒரு பெண்ணை அழைத்து வந்து இந்த பெண்ணும் இதே வீட்டில் தான் இருப்பார் என்று கூறுகிறார். ஆனால் மனைவி அதிர்ச்சி அடையாமல் நாம் விவாகரத்து குறித்து பேசலாமா என்று கூறுவார். ஆனால் சட்டம் ஒரு வருடம் காத்திருக்க சொல்கிறது. இந்த ஒரு வருடத்தில் கணவன் மனைவி இடையே உள்ள உறவு என்ன ஆனது? புதிதாக வந்த பெண்ணுக்கு நேர்ந்த அனுபவங்கள் என்ன? என்பதை சொல்வது தான் இந்த படத்தின் கதை.
ராஜேஷ், செந்தாமரை, சரத்பாபு ஆகியோர் இந்த படத்தில் அலட்டல் இல்லாமல் சூப்பராக நடித்திருந்தனர். அம்பிகா தனது கேரக்டரை மிகவும் மெருகேற்றி நடித்து இருந்தார் என்று அன்றைய ஊடகங்கள் பாராட்டின. இந்த படம் வெளியாகி 37 வருடங்கள் ஆனாலும் இந்த படத்தை இன்றும் தொலைக்காட்சியில் பார்த்தாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள்.