ஒரே ஒரு காரணத்துக்காக.. மேனகா சுரேஷின் ஜோடியாக நடிக்க மறுத்த நடிகர் சுவாமிநாதன்..

By Bala Siva

Published:

பொதுவாக சினிமாவில் நடிக்க வருபவர்கள் முதலில் சேர்வது ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் என்பதை பலரது வாழ்க்கை வரலாற்றில் பார்த்திருக்கின்றோம். அந்த வகையில் காமெடி நடிகர் சுவாமிநாதன் பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்த பிறகு தான் முன்னணி காமெடி நடிகராகவும் உயர்ந்திருந்தார். அதிலும் அவருக்கு ஜூனியக அங்கே சேர்ந்தவர் தான் நடிகர் நாசர் என்பது பலருக்கு அறியாத தகவல்.

காமெடி நடிகர் சுவாமிநாதன் கும்பகோணத்தை சேர்ந்தவர். இவர் சிறுவயதிலேயே சினிமா மீதுள்ள ஆசை காரணமாக சென்னைக்கு சென்று சினிமா வாய்ப்பு தேட போகிறேன் என பெற்றோரிடம் கூறினார். பெற்றோர்களும் அவரை உற்சாகப்படுத்தி சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை வந்த பிறகு யாரிடம் வாய்ப்பு கேட்பது என்று தெரியாமல் தெருத்தெருவாக அலைந்தார் சுவாமிநாதன். அதன் பிறகு தான் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் முதலில் படித்து அதன் பிறகு வாய்ப்பு கேட்போம் என்று முடிவு செய்து அவர் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் விண்ணப்பம் செய்தார். பானுமதி அம்மா தான் அவரை இன்டர்வியூ எடுத்து நடிக்க சொல்லி கேட்டார். அவரது நடிப்பு பிடித்து விட உடனடியாக இன்ஸ்டியூட்டில் சேர்ந்து விட்டார்.

இவர் பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்த அடுத்த வருடம் தான் நடிகர் நாசர் அதே பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்திருந்தார். ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படித்து முடித்தவுடன் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடிக்க ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அங்கு சென்றார். இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் அவரை பார்த்து ஒரு சில வசனங்களை பேச சொன்ன போது அவர் சரியாக பேசியதால் அந்த படத்தில் அவர் அறிமுகமானார். இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி ஆசிரியராக நடித்த நிலையில், சுவாமிநாதன் மாணவராக நடித்தார்.

இந்த படத்தை அடுத்து நானே ராஜா நானே மந்திரி, சின்ன பூவே மெல்ல பேசு, மனசுக்குள் மத்தாப்பு, சிறையில் சில ராகங்கள், தலைவாசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மேலும் இரட்டை ரோஜா, அருணாச்சலம், பூவெல்லாம் உன் வாசம், ஆறு, சிவாஜி உட்பட பல படங்களில் நடித்தார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இவர், விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடித்து வந்தார். ஆரம்ப காலகட்டத்தில் இவரை லொள்ளு சபா சுவாமிநாதன் என்றால் தான் அனைவருக்கும் தெரியும் என்ற அளவுக்கு பிரபலமானார். லொள்ளு சபாவின் மூலம் பிரபலமான முன்னணி நடிகர் சந்தானத்துடனும் இணைந்து பல படங்களில் காமெடி சரவெடிகளை உருவாக்கிய பெருமையும் சுவாமிநாதனை சேரும்.

நடிகர் சுவாமிநாதனுக்கு ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் நான் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்று அந்த படத்தில் இருந்து வெளியே வந்துவிட்டார். ஹீரோவாக ஒரு படம் நடித்து அந்த படம் வெற்றி அடையவில்லை என்றால் அப்படியே நம்மை சினிமாவிலும் இருந்து ஒதுக்கி விடுவார்கள். ஆனால் காமெடியனாக நடித்தால் தொடர்ந்து பல வருடங்கள் நடித்துக் கொண்டிருக்கலாம் என்று முடிவு செய்து தான் அவர் ஹீரோ வாய்ப்பை தட்டி கழித்தார்.

கடந்த ஆண்டு வெளியான கோடை, கோஷ்டி, டிடி ரிட்டர்ன்ஸ், துடிக்கும் கரங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சுவாமிநாதன், திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். லொள்ளு சபா மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி, கோலங்கள், அரசி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சமாக இருக்கும் நிலையில் சுவாமிநாதன் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் அனைவரது ஆசையாக உள்ளது.