தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் என மூன்று துறைகளிலும் தனது வெற்றியை நிலை நிறுத்தி வந்த மிக சிலரில் ஒருவர்தான் சித்ரா லட்சுமணன்.
சித்ரா லட்சுமணன் தமிழ்நாட்டில் உள்ள ஆரணி மாவட்டத்தை சேர்ந்தவர். ஆரணியில் இவர் ஒரு ஹார்டுவேர் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தான் அவருக்கு சென்னையில் பத்திரிகையில் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் ஜெயகாந்தனின் தாயின் மணிக்கொடி உள்பட ஒருசில பத்திரிகைகளில் பணிபுரிந்தார்.
இந்த நிலையில் தான் இயக்குனர் பாரதிராஜாவின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அப்போது அவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டார். அவருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த படம் தான் ’மண்வாசனை’. பாரதிராஜா இயக்கத்தில் பாண்டியன், ரேவதி, விஜயன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதுடன் சித்ரா லட்சுமணனுக்கு மிகப்பெரிய லாபத்தையும் ஈட்டிக் கொடுத்திருந்தது.
இதனையடுத்து அவர் அம்பிகை நேரில் வந்தாள், வாழ்க்கை, புதிய தீர்ப்பு, ஜல்லிக்கட்டு, சின்னப்பதாஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்தார். அதுமட்டுமின்றி அவர் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக கமல்ஹாசன், நிரோஷா நடித்த சூரசம்ஹாரம், பிரபு, நக்மா நடித்த பெரிய தம்பி, கார்த்திக், ரோஜா நடித்த சின்ன ராஜா ஆகிய திரைப்படங்களை இயக்கினார். மேலும் மேற்கண்ட மூன்று படங்களையும் அவரே தயாரிக்கவும் செய்திருந்தார்.
இந்த நிலையில் தான் அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. முதல் முதலாக அவருக்கு பாரதிராஜா இயக்கத்தில் பாண்டியன், ரேவதி நடிப்பில் உருவான ’புதுமைப்பெண்’ என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து அவர் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார்.
தாவணி கனவுகள், ஜப்பானில் கல்யாணராமன், சுந்தரி நீயும் சுந்தரி நானும், காதல் வைரஸ், வசூல்ராஜா எம்பிபிஎஸ், பொம்மலாட்டம், சகுனி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சகலகலா வல்லவன், பாஸ் என்ற பாஸ்கரன், கட்டப்பாவ காணோம் உட்பட பல படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் உதயநிதியின் மேனேஜிங் டைரக்டராகவும் நடித்திருப்பார்.
மேலும் சித்ரா லட்சுமணன் திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம், கங்கா யமுனா சரஸ்வதி, இதயம், சொந்த பந்தம் ஆகிய சீரியல்களில் நடித்தார். அதேபோல் ஜெயா டிவியில் ஒளிபரப்பான அக்கா என்ற சீரியலில் அவர் நடித்துள்ளார்.
பாரதிராஜாவுடன் ஐம்பது வருட நட்பில் இருக்கும் சித்ரா லட்சுமணன் இளையராஜாவுடனும் மிக நெருங்கிய நட்பில் உள்ளார். தற்போது அவர் யுடியூப் சேனல் நடத்தி வருகிறார் என்பதும் அதில் தனது மலரும் நினைவுகளை ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகராக இருந்து வரும் சித்ரா லட்சுமணன் மேலும் பல படங்கள் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
