இயக்குநர் வெற்றிமாறன் படங்களில் ஒவ்வொன்றிலும் தன்னுடைய தனி முத்திரையைப் பதித்து சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர்தான் நடிகர் கிஷோர். ஆரம்ப காலகட்டங்களில் கன்னடப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த கிஷோரை 2007 ஆம் ஆண்டு வெளியான தனுஷ்-ன் பொல்லாதவன் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் வெற்றிமாறன். இதில் இவர் வில்லனாக நடித்த செல்வம் கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது.
உலகநாயகனுடன் கைகோர்த்த ஹெச்.வினோத் : வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்
பொல்லாதவன் படம் இவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகளைக் கொடுக்க வில்லன் கதாபாத்திரத்தில் ஜொலித்தார். பின்னர் ஆடுகளம், வடசென்னை என அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் நடிக்க வைத்தார் வெற்றிமாறன். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கேரக்டர் ரோல்களிலும் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்தார். ஹரிதாஸ், வீரப்பன் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது.
கடந்த ஆண்டு பான் இந்தியா படமாக வெளியான காந்தாராவில் காவல் அதிகாரியாக மிரட்டியிருப்பார். கண்களிலேயே நடிப்பில் மிரட்டும் நடிகர் கிஷோர் திரைத்துறை மட்டுமல்லாது விவசாயத்திலும் கவனம் செலுத்திவருகிறார்.
பெரிய பெரிய திரைப் பிரபலங்கள் பங்களா, ஸ்டார் ஹோட்டல்ஸ், ஷேர் மார்க்கெட் என்று முதலீடு செய்து வரும்வேளையில் கிஷோரின் விவசாயப்பணி திரையுலகைச் சேர்ந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தன்னுடைய சொந்த ஊரான பெங்களுர் அருகே சிறிய கிராமத்தில் 12 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார்.
தான் மட்டுமல்லாது தன்னுடைய குடும்பத்தையும் விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தி ஷூட்டிங் இல்லாத நாட்களில் மண்வெட்டியும் வேட்டியுமாக இயற்கை விவசாயியாக மாறி விடுகிறார் கிஷோர். இவர் தன்னுடைய பண்ணை வீட்டில் தங்குவதாகவும் சுற்றிலும் மாடுகள், ஆடுகள் என கிராமத்து சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார். இவர் தனக்கு மாடுகளின் சப்தமும், மாட்டுச் சாணம் வாசமும் மிகவும் பிடித்திருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
நாட்டு மாடுகள், ஆர்கானிக் விளைபொருட்கள் என ஒரு மினி நம்மாழ்வாராகவே செயல்பட்டு வருகிறார். என்னதான் சினிமாவில் நிறைய சம்பாதித்தாலும் இந்த வாழ்வே நிம்மதியை தருவதாகவும் தோட்டத்திற்கு வந்தால் எல்லா டென்ஷனும் காணாமல் போய்விடுவதாகவும் கூறுகிறார்.
மேலும் புத்தகங்கள் படிப்பது, புகைப்படங்கள் எடுப்பது, கால்நடைகளுக்கு தீவனங்கள் கொடுப்பது என அக்மார்க் விவசாயியாகவே வாழ்ந்து வரும் நடிகர் கிஷோரை நாமும் பாராட்டுவோம்.