சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி, கேரளா மாநிலத்திற்கு இணையாக தமிழிலும் வசூல் வேட்டை நடத்தி வரும் திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நிறைய தமிழ் நடிகர்களும் நடித்திருந்தனர்.
அந்த வகையில், பிரபல குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான், ஒரு சிறிய கதாபத்திரத்தில் அதிக தாக்கத்தை உண்டு பண்ணக் கூடிய அளவில் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கைதி படத்திற்கு பிறகு ஜார்ஜ் மரியான் பெயர் சொல்லும் படமாக மஞ்சும்மேல் பாய்ஸ் மாறியுள்ள நிலையில், அவரது திரை பயணத்தை பற்றி தற்போது காணலாம்.
கைதிக்கு முன் ’கலகலப்பு’ உள்பட பல படங்களில் காமெடி கேரக்டர்களில் கிட்டத்தட்ட 100 படங்கள் வரை நடித்துள்ளார் ஜார்ஜ் மரியான். இதில் சில படங்களில் அவரது காமெடி மற்றும் ஆக்டிங் அதிக பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
நாடக நடிகராக இருந்து திரையுலகிற்கு வந்தவர்களில் ஒருவரான ஜார்ஜ், பார்த்திபன் நடிப்பில் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான ’அழகி’ என்ற திரைப்படத்தில் தான் ஒரு ஆசிரியர் வேடத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் அவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அவர் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார்.
சாமுராய், சொல்ல மறந்த கதை, ஜேஜே, சண்டக்கோழி, காஞ்சிவரம், மதராசபட்டினம், தெய்வத்திருமகள், மௌனகுரு, தீயா வேலை செய்யணும் குமாரு, சைவம், காவியத்தலைவன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். ஜார்ஜ் மரியானின் காமெடி நடிப்பு, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்றால் அது சுந்தர் சி இயக்கத்தில் உருவான கலகலப்பு திரைப்படத்தில் தான். இந்த படத்தில் அவர் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார்.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பலருடைய காவல்துறை வேடங்களை அவர் அவ்வப்போது வசனங்கள் பேசி சிரிக்க வைத்திருப்பார். ஆனால் ஜார்ஜ் மரியானுக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்த படம் தான் கைதி. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் மிஷின் துப்பாக்கி இருப்பதை கார்த்தியிடம் கூறி அதன்மூலம் காவல் நிலையத்தை தாக்க வந்த வில்லன் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக சிதைப்பதற்கு ஒரு காரணமாக இருந்தார்
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற பின்னர் தான் ஜார்ஜ் மரியான் என்றால் யார் என்பது பலருக்கு தெரிய வந்தது. இதன் பின்னரும் அவர் விஜய்யின் பிகில், ரஜினியின் அண்ணாத்த, நாய் சேகர் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது கூட அவர் ’இந்தியன் 2’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கு மத்தியில், கைதி படத்தின் நெப்போலியன் கேரக்டரில் அவர் விஜய்யின் லியோ படத்திலும் நடித்திருந்தார்.
ஜி சினிமா விருது, ஆனந்த விகடன் சினிமா விருது உள்பட ஒரு சில விருதுகளையும் ஜார்ஜ் மரியான் பெற்றுள்ளார். அப்படி ஒரு சூழலில் தான் தற்போது மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம், தமிழகத்தை தாண்டி கேரளாவிலும் ஜார்ஜ் மரியனுக்கு நல்ல ஒரு பெயரை எடுத்து கொடுத்துள்ளது. காமெடிகளில் கலக்கிய ஜார்ஜ், இந்த படத்தில் ஒரு சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பி இருந்தார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பஞ்சம் இருந்து வரும் நிலையில் ஜார்ஜ் மரியான் அந்த இடத்தை ஓரளவு நிரப்பி வருகிறார் என்றால் அது மிகையாகாது.