தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது ஒரே ஒரு தவறு செய்த நடிகர் ஆனந்த் பாபு, பத்து வருடங்கள் சினிமாவிலேயே நடிக்க முடியாத நிலை இருந்தது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கலைஞர் நாகேஷின் மகன் தான் ஆனந்த் பாபு. நாகேஷ் போலவே மிக அபாரமாக நடிப்பு திறமை கொண்டவர் என்பதால் இவருக்கு இளம் வயதிலேயே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது.
20 வயதிலேயே அவர் டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான ’தங்கைக்கு ஒரு கீதம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஒரு சில படங்களில் நடித்த நிலையில் அவருக்கு திருப்புமுனையை கொடுத்த படம் என்றால் அது ’பாடும் வானம்பாடி’ என்ற திரைப்படம் தான்.
கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. டிஸ்கோ டான்ஸ் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ஆனந்த் பாபு ஒரு டிஸ்கோ டான்சராகவே நடித்திருப்பார் என்பதை விட அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் என்றே சொல்லலாம். இந்த படம் வெற்றி காரணமாக ஆனந்த் பாபுவுக்கு ஏகப்பட்ட படங்களில் நடிக்கவும் வாய்ப்பு குவிந்தது.
உதயகீதம், இளமை, விசுவநாதன் வேலை வேணும், பார்த்த ஞாபகம் இல்லையோ, அர்த்தமுள்ள ஆசைகள், வீடு மனைவி மக்கள், புரியாத புதிர், புது புது ராகங்கள், புது வசந்தம், சிகரம், சேரன் பாண்டியன் என பல படங்களில் நடித்தார். கடந்த 1991 ஆம் ஆண்டு மட்டும் இவர் 13 படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் பிசியாக இருந்து கொண்டிருந்த போது தான் திடீரென அவருக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டது. போதை காரணமாக இவர் சரியாக படபிடிப்பிற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து அவருக்கு படங்கள் வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. ஒரு காலகட்டத்தில் 1999 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அவர் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
முழுக்க முழுக்க போதையில் இருந்ததாகவும் அப்பா சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் அவர் விற்று தீர்த்ததாகவும் கூறப்படுவது உண்டு. இதனையடுத்து 2009 ஆம் ஆண்டுதான் நீண்ட இடைவெளிக்கு பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான சூர்யாவின் ’ஆதவன்’ திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆனார். அதன் பிறகு ’பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார்.
இதனை அடுத்து அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ’கஸ்தூரி’ என்ற சீரியலில் அவர் அபாரமாக நடித்திருப்பார். அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’மௌன ராகம்’ ’மௌனராகம் 2’ ’கிழக்கு வாசல்’ போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது குடிப்பழக்கத்தை மறந்து அவர் முழுவதுமாக திரையுலக மற்றும் சின்னத்திரை உலகில் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் தெரிகிறது.
நடிகர் ஆனந்த் பாபு கடந்த 1985 ஆம் ஆண்டு சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உண்டு. பிஜேஷ், கஜேஷ் மற்றும் யோகேஷ் ஆகியவர்களில் விஜேஷ், கஜேஷ் ஆகிய இருவரும் நடிகர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.