நவராத்திரி 4 ம் நாளான இன்று (18.10.2023) நவராத்திரியின் நடுப்பகுதியைத் துவங்கி இருக்கிறோம். இன்று மகாலெட்சுமியின் திருநாள்
மகாலெட்சுமி என்றாலே செல்வத்துக்குரிய நாயகி மட்டும் அல்ல. நிம்மதி, மகிழ்ச்சியைத் தரக்கூடியவள். அஷ்டலெட்சுமிக்கும் நாயகியாக விளங்குபவள். ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்தையும் தருபவள் தான் இவள். அதனால் தான் இந்த தேவியின் அழகான ரூபத்தை ஒரு பெண்ணுக்கு உவமையாக சொன்னார்கள்.

ஒரு பெண்ணை மகாலெட்சுமி மாதிரி இருக்கிறாள் என்கிறார்கள். பெண் வீட்டில் மங்கலகரமா இருக்கணும். பொறுமை, சாந்தம், அன்பு, பணிவு, எளிமை, விருந்தோம்பல்னு எல்லாம் இருக்கணும். புன்னகையோட இருக்கணும். இது பொன்னகையை விட உயர்ந்தது.
எப்பவுமே அன்போடு பேசணும். அதனால இந்த நாளில் இந்த மகாலெட்சுமியை வழிபட்டால் அஷ்லெட்சுமியின் அருளும், நிம்மதியும் கிடைக்கும். அஷ்டலெட்சுமி என்றால் திருமகளின் 8 விதமான தோற்றங்கள். ஆதிலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்;சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி.

எளிமையாகவும், அன்பான வாழ்க்கையும் வாழ இந்த மகாலெட்சுமியை வழிபட வேண்டும்.
இன்று ஜாதிமல்லி, கதிர்பச்சை என்ற இதழும் விசேஷம். கதம்ப சாதம் நைவேத்தியம். இன்று பட்டாணி சுண்டல் செய்து வழிபடலாம். பழங்களில் கொய்யா பழம் உகந்தது. பைரவி ராகத்தில் அமைந்த பாடலைப் பாட வேண்டும்.
கொலு வைத்தவர்கள் காலை 9 மணிக்குள்ளும், மாலை 6 மணிக்கு மேலும் பூஜை செய்து வழிபடலாம். காலையில் பழங்கள், உலர்ந்த திராட்சைகள் வைத்துப் பூஜை செய்யலாம். மாலையில் புளியோதரை, சுண்டல் வைத்துப் பூஜை செய்யலாம். பொதுவாக நவராத்திரி என்பதால் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்வதே உகந்தது.
இன்று வழிபடுவதால் நமக்கு கடன் தொல்லை தீரும். இன்றைய தினம் கடன் வாங்காதவர்களே இருக்க முடியாது. அவர்களது கடன் சுமை தீரும். வீட்டில் மகாலெட்சுமி படம் வைத்துள்ளவர்கள் அதை வைத்து வழிபடலாம். அல்லது பெருமாளுடன் மகாலெட்சுமி இருந்தாலும் அந்தப் படத்தை வைத்து வழிபடலாம். வீட்டிற்கு வரும் பெண்களுக்கு குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை முகமலர்ச்சியுடன் முதலில் வரவேற்க வேண்டியது பெண் தான்.

எவ்வளவு பெரிய பகையாளியாக இருந்தாலும் நம்மைத் தேடி வீட்டிற்கு வந்தால் அவர்கள் நமது அதிதி. அதாவது விருந்தினர். வள்ளுவர் சொல்வது இதைத் தான். ஒரு வீட்டிற்கு வரக்கூடிய பெண் அதாவது விருந்தினராக வருவது மகாலெட்சுமி தான். அவர்கள் முகம் கோண நாம் நடந்து கொண்டால் அது மகாலெட்சுமியை அவமதித்ததற்குச் சமம். வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வாங்கன்னு கேட்டுட்டு அவர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து விடுங்க. இது பகையைக் குறைக்கும்.
அவர்கள் யாராக இருந்தாலும் பிடிச்சவங்க, பிடிக்காதவங்கன்னு பார்க்காதீங்க. சுமங்கலிப் பெண்ணாக இருந்தால் கண்டிப்பாக அவர்கள் கிளம்பும்போது குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும். இதுதான் நாம் மகாலெட்சுமிக்கு செய்ய வேண்டிய நல்ல ஒரு காரியம்.
அப்படி செய்யவில்லை என்றால் வீட்டுக்கு வந்த மகாலெட்சுமியை நீங்களே விரட்டி அனுப்புவதற்குச் சமம் ஆகி விடும். அதன்பிறகு நிறைய பிரச்சனைகள், துன்பங்கள் வந்து என்ன பயன்? இப்படி செய்தால் நாம் இன்னும் ஒரு படி உயரத்தான் செய்வோம். அதனால் இந்த மாதிரி ஒரு சிலருக்கு இந்த எண்ணம் இருந்தால் அவர்கள் மாற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக மகாலெட்சுமி உங்களுக்கு அருள்புரிவாள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



