தலைவர் 170-யை ஜெய்பீம் புகழ் T.J.ஞானவேல் இயக்குகிறார். இந்தப்படத்தில், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், ரித்திகாசிங், துஷாரா விஜயன், அர்ஜூன் சார்ஜா, வி.ஜே.ரக்ஷன் மற்றும் மேலும் பலர் நடிக்கிறார்கள்.
அனிருத் இசை, லைகா புரொடக்ஷனின் தயாரிப்பு என பட்டையை கிளப்பும் இந்தக் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் இயக்குனரான T.J.ஞானவேல், அசோக் செல்வன், பிரியா ஆனந்த் நடித்த ‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற படத்தை முதலில் இயக்கியவர். அந்த படம் பெரிய வெற்றியை அடையவில்லை. அதன் பின்னர் 3 வருடங்களுக்கு பிறகு சூர்யாவை வைத்து ‘ஜெய்பீம்’ என்ற படத்தை கொடுத்துள்ளார்.
அந்த வெற்றியை தக்க வைக்க தலைவர் 170-ல் T.J.ஞானவேல் முழு உழைப்பையும் கொடுத்து உழைப்பார் என்று நம்பப்படுகிறது. மேலும், தலைவர் 170-ல் சூப்பர் ஸ்டார் காவல் அதிகாரியாக நடிப்பதாகவும், போலி என்கவுண்டர்களுக்கு எதிராக போராடும் ஹீரோவாக வருவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
மூன்று முகம், பாண்டியன், தார்பார், மற்றும் ஜெயிலர் இவை அனைத்துமே ரஜினிகாந்த் போலீஸாக நடித்து சூப்பர் ஹிட் ஆன படங்கள். போலீஸ் அதிகாரிக்கான கம்பீரம் ரஜினிகாந்தின் தோற்றத்தில் இயல்பிலேயே இருக்கும். அதே பாணியில் உருவாகுவதால், தலைவர்-170 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும்.
அக்டோபர் 4ம் தேதி திருவனந்தபுரத்தில் பட பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. பின் அங்கிருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற போவதாக தெரிகிறது.
எழுத்தாளர் மகரிஷி எழுதிய புவனா ஒரு கேள்விக்குறி என்ற நாவலை எஸ்.பி முத்துராமன் அதே பெயரில் படமாக எடுத்தார்.
ரஜினிகாந்த் ஹீரோவாகவும், சிவக்குமார் வில்லனாகவும் நடித்த அந்த படத்தின் படப்பிடிப்பும் நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியின் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. அதை மீண்டும் தலைவர் நினைவு கூர்ந்து அங்கிருந்தவர்களிடம் கூறியதாக தெரிகிறது. அந்த படம் வெளிவந்து 46 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மீண்டும் நெல்லை மண்ணிற்கு படப்பிடிப்பிற்காக வந்திருப்பது பிரபலமாகியுள்ளது. படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க அவரது ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.