பொதுவாக நடிகவேள் எம்.ஆர். ராதா சண்டை காட்சிகளில் நடிப்பதை விரும்ப மாட்டார். காமெடி மற்றும் வில்லத்தனமான கேரக்டர் ஆகியவற்றில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்றே அவர் விரும்புவார். அவர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது கூட சண்டை காட்சிகளையும் நடிப்பதை தவிர்ப்பார். அதேபோல் திரைப்படங்களிலும் அவர் சண்டைக் காட்சி இருக்கும் படம் என்றால் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் எம்ஆர் ராதாவை முதன்முதலாக சண்டைக் காட்சியில் நடிக்க வைத்தது எம்ஜிஆர் என்பது ஒரு அபூர்வமான தகவலாகும். நல்லவன் வாழ்வான் என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் எம் ஆர் ராதா நடிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் விரும்பினார். ஆனால் அதில் சண்டை காட்சி இருப்பதால் அதில் நடிக்க எம் ஆர் ராதா தயங்கினார்.
நீங்கள் இந்த கேரக்டரில் நடித்தால் தான் நன்றாக இருக்கும், நீங்கள் இந்த படத்தில் நடிக்க சம்மதியுங்கள், உங்களுக்கு சிரமம் இல்லாமல் சண்டைக் காட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எம்ஜிஆர் உத்தரவாதம் கொடுத்ததை அடுத்து எம்ஆர் ராதா அந்த படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் தண்ணீரில் சண்டை போடும் வகையில் ஒரு காட்சி அமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் மற்றும் எம்ஆர் ராதா தண்ணீரில் சண்டை போடும் காட்சிகள் ஒரு வாரம் தொடர்ச்சியாக படமாக்கப்பட்ட நிலையில் தண்ணீரில் அதிக நேரம் இருந்ததால் எம்ஆர் ராதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். ஆனால் அவர் குணமாகும் வரை அருகிலேயே இருந்து எம்ஜிஆர் அவரை பார்த்துக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த படத்தின் சண்டைக் காட்சியை திரையில் பார்க்கும்போது எம் ஆர் ராதாவே பார்த்து ஆச்சரியப்பட்டார் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை, எம்.ஆர் ராதாவுக்காக மிகவும் எளிமையாக எம்ஜிஆர் இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நல்லவன் வாழ்வான் திரைப்படம் கடந்த 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியானது. ப நீலகண்டன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் திரைக்கதையை அறிஞர் அண்ணா எழுதினார் என்பதும் இந்த படத்திற்கு டிஆர் பாப்பா இசையமைத்திருந்தார்.
எம்.ஜி.ஆர் ஜோடியாக ராஜசுலோச்சனா நடிக்க, எம்ஆர் ராதா, நம்பியார் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். நல்லவன் வாழ்வான் திரைப்படம் எம்ஜிஆரின் 50 வது படம் ஆகும். இந்த படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் பல நகரங்களில் 100 நாட்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.