ரஜினி, கமல் என பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் நடித்துப் பெயர் பெற்றவர் நடிகை சுமித்ரா. அழகு கொஞ்சும் முகமும், அழகிய தோற்றப்பொலிவு, நீள்வட்ட முகம் என 70களின் இளைஞர்களைத் தனது வசீகரத்தால் கட்டிப் போட்டார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தினார். ஆரம்பத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகவும், பணக்காரன் படத்தில் அதே ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார்.
சுமித்ரா 1953ம் ஆண்டு செப்.18ல் கேரளாவின் திருச்சூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாந்தா குட்டி. இவரது பெற்றோர் ராகவன் நாயர், ஜானகி. உடன் 3 சகோதரர்கள் உள்ளனர். தந்தையின் வேலை காரணமாக ஆந்திராவிற்கு இடம்பெயர்ந்தது. நாட்டியத்தில் ஆர்வம் உள்ளதால் சிறுவயதிலேயே அதை முறைப்படிக் கற்றுக்கொண்டார்.
சென்னையில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு ஒருமுறை வந்தார். அப்போது நடிகை கே.ஆர்.விஜயாவின் நடனக்கலைஞர் முருகப்பன் மாஸ்டர் சுமித்ராவைப் பார்த்துள்ளார்.
உடனே அவளது பெற்றோர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். சினிமாவிற்கு அழைத்தார். ஆனால் அவளது பெற்றோர்கள் மறுப்புத் தெரிவித்தனர். அடிப்படையிலேயே நடனம் மற்றும் கலைத்துறையில் ஈடுபாடு காரணமாக பெற்றோரிடம் சினிமாவில் நடிக்க அனுமதி கேட்டார்.

அவளது ஆசைப்படி பெற்றோரும் முருகப்பன் மாஸ்டரிடம் சென்று சினிமா ஆர்வத்தைப் பற்றி சொல்ல, சுமித்ராவிற்கு மலையாளப்பட வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
1972ம் ஆண்டு பிரேம்நசீர் நடிப்பில் வெளியான நித்தசாலா. இந்தப் படத்தில் தான் நடிகை சுமித்ரா அறிமுகம். அதுவரை சாந்தா குட்டி என்றிருந்த இவரது பெயர் சுமித்ராவானது. தொடர்ந்து இவருக்கு வந்த படங்கள் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தன.
தொடர்ந்து குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் அளித்தனர்.
மலையாளத்தில் நெல்லு என்ற படத்தில் பிரதான வேடத்தில் நடித்து அசத்தினார். முத்துராமன், பண்டரிபாய் நடிப்பில் அவளும் பெண் தானே படத்தில் 1974ல் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தின் நாயகி சுமித்ரா தான்.

ஒரு குடும்பத்தின் கதை, லலிதா, மோகம் 30 வருஷம் ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. 1977ல் புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் நாயகியாக நடித்தார். ரஜினி, சிவகுமாரும் இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் இவரது நடிப்பு பலராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. அருமையான நடிப்பு என்று பாராட்டினார்கள்.
இந்தப் படத்தில் முதன் முதலாக சிவகுமார் வில்லனாக நடித்திருந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். பல விருதுகளை வென்றது. ராஜா என்பார் மந்திரி என்பார் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
அண்ணன் ஒரு கோவில், சிட்டுக்குருவி, நிழல் நிஜமாகிறது, இறைவன் கொடுத்த வரம், சொன்னது நீ தானா, ஜஸ்டிஸ் கோபிநாத் என பல படங்களில் நடித்து அசத்தினார்.
இவரது முதல் கணவர் ரவிக்குமார். இவர் பிரபல மலையாள நடிகர். பின்னர் இருவரும் விவாகரத்து செய்தனர். தொடர்ந்து கன்னட இயக்குனர் ராஜேந்திர பாபுவைக் காதலித்து மறுமணம் செய்தார். இவர்களுக்கு உமா, நட்சத்திரா என இரு மகள்கள் உள்ளனர். ராஜேந்திரபாபுவும் மாரடைப்பால் காலமானார்.

மூத்தமகள் உமா வீரநடை, சொக்கத்தங்கம், இலக்கணம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 2வது மகளும் சினிமாவில் நடித்து வருகிறார். இவரது பெயர் தீப்தி. சினிமாவுக்காக நட்சத்திரா என மாற்றிக் கொண்டார். இவரும் கன்னடத்தில் பிரஜ்வால் நடிக்கும் சரிகம படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


