விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படம் அக்.19ல் திரைக்கு வர உள்ள நிலையில், தளபதி-68க்கான ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமடையத் தொடங்கியுள்ளன.
திரைக்கதையிலும், அதன் மேக்கிங்கிலும் தனக்கென ஒரு அடையாளம் கொண்ட இயக்குநர் வெங்கட்பிரபு. அவருக்கு தளபதி 68ஐ இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் இளைஞர் பட்டாளத்தையும், கிரிக்கெட்டையும் மையமாக வைத்து பெரும்பாலான சினிமா ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரிட்டான சென்னை-28ன் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து சரோஜா, கோவா என இளைஞர் பட்டாளம் கொண்டாடும் படங்களாக கொடுத்து வந்த வெங்கட்பிரபு, தல அஜித்தை வைத்து நெகட்டிவ் ஹீரோ கதையாக மங்காத்தாவில் மிரட்டி இருப்பார். அதன் பிறகு பிரியாணி, மாஸ், சென்னை 28- 2ம் பாகம், போன்ற படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால், வெற்றி படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வெங்கட்பிரபு இருந்தபோது அரசியல் மற்றும் டைம் லுப்பைக் கதைக்கருவாக கொண்ட மாநாடு படத்தை இயக்கினார்.
இதில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, பிரேம்ஜி, ஒய்,ஜி மகேந்திரன் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் நடித்திருப்பார்கள். அனைவரும் அவர்களின் பங்கினை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்திருப்பார்கள். குறிப்பாக சிம்பு மற்றும் எஸ்,ஜே சூர்யாவின் கதாப்பாத்திரம் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். டைம் லுப் தமிழ் சினிமாவிற்கு பரிட்சயம் இல்லாத விஷயமாக இருந்தாலும், மக்களுக்கு புரியும் வகையில் சொல்லியது படத்தின் மிகப்பெரிய வெற்றி. திரைக்கதையினை நகர்த்தும் விதத்தில் புதுமையைக் கையாளும் இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது தளபதி-68ஐ இயக்குகிறார்.
AGS நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, அஜ்மல் என பலர் நடிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ் சினிமாவிற்கு பிரபலமான 80களில் பெண்களால் கொண்டாடப்பட்ட ஹீரோ ஒருவர் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பாடல்கள் மூலம் பிரபலமான மைக் மோகன் தான் அந்த ஹீரோ.
ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்த மோகன் தனது திரைப்பயணத்தில், சரிவை சந்தித்து சினிமா விட்டு விலகினார். மோகனை வெங்கட்பிரபு தன்னுடைய முந்தைய படங்களில் தொடர்ந்து நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் அவர் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பின் தளபதி 68ல் நடிக்க மைக் மோகன் சம்மதித்துள்ளார் என கூறப்படுகிறது. இச்செய்தி தளபதி68ன் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இது உண்மையா, இல்லையா என்பது இன்று நடைபெறும் தளபதி68 படப் பூஜையின் போது தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.