இன்று அக்டோபர் 2. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள். நாடு முழுவதும் இன்றைய தினத்தை காந்தி ஜெயந்தியாக அரசு அறிவித்து வருடந்தோறும் அரசு விடுமுறையும் விடுகிறது. இன்றைய இனிய நாளில் நாம் தேசப்பிதாவை நினைவு கூறும் வகையில் ஒரு இனிய சம்பவத்தைப் பார்க்கலாம்.
தற்போது டைரக்டர் கே.எஸ். என்றாலே நமக்கு ரவிக்குமார் தான் நினைவுக்கு வரும். அந்த காலத்தில் எல்லாம் டைரக்டர் கே.எஸ். என்று சொன்னால் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைத் தான் சொல்வார்கள். கலைவாணரிடம் மிகவும் அன்பும், மரியாதையும் கொண்டவர். ரஷ்யாவில் கலைவாணர் பேசுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறுவார். அதே நேரத்தில் ரஷ்ய மொழியும் அவருக்குத் தெரியும்.
ஒரு கூட்டத்தில் கலைவாணர் பேசும் போது ரஷ்ய மொழியில் பேச்சை ஆரம்பித்து விட்டார். கலைவாணர் ரஷ்ய மொழியில் பேசியதைக் கேட்ட டைரக்டர் கே.எஸ். அப்படியே அசந்து போய் மூக்கில் விரலை வைத்துக் கொண்டார்.
கலைவாணர் பேச்சை நிறுத்தி விட்டு தமிழில் சொன்னார். இவ்வளவு தான் எனக்குத் தெரியும். பாக்கிப் பேச்சுகளை எல்லாம் வழக்கம் போல நான் தமிழில் தான் பேசப் போகிறேன் என்று சொன்னதும் கூடி இருந்தவர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி சிரித்து விட்டனர்.
அவரால் எப்படி ரஷ்ய மொழியை இவ்வளவு அழகாகப் பேச முடிந்தது என்று தெரிந்தால் அவரது சாமர்த்தியம் விளங்கும். அவர் முதலில் சொன்னது வேறு ஒன்றும் இல்லை. இதுதான்…
என் அருமை ரஷ்ய மக்களே! உங்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தான் ரஷ்ய மொழியில் பேசினார். அவர் தங்கி இருந்த ஹோட்டலில் ரஷ்ய மொழி தெரிந்த தமிழர்கள் இருந்தனர். அவர்களிடம் கேட்டுத் தெரிந்து அந்த வசனத்தை மனப்பாடம் செய்து கொண்டு பேசி எல்லோரையும் திகைக்க வைத்தார்.
மகாத்மா காந்தியை ஒரு ரஷ்ய மேலதிகாரி கீழ்த்தரமாகப் பேசி விட்டார். அந்த அதிகாரி தவறாகச் சொன்னதைத் திரும்பப் பெற வேண்டும். மன்னிப்பும் கோர வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அவர் மன்னிப்பு:க் கேட்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கோபமாக கலைவாணர் சொன்னார். அடுத்த வினாடியே அந்த அதிகாரி கலைவாணரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதோடு எல்லோரது முன்பும் அவர் தவறாகச் சொன்னதைத் திருப்பப் பெற்றார்.
என்எஸ்கே.யின் சொந்த ஊர் அதாவது பிறந்த ஊர் நாகர்கோவில் அருகில் உள்ள ஒழுகினசேரி. அங்குள்ள சரஸ்வதி ஹாலில் டி.கே.எஸ்.நாடகக் குழுவினர் நடத்திய கோவலன் நாடகத்தில் பாண்டியனாக நடித்து அசத்தினார். அதைப் பார்த்து ரசிகப் பெருமக்கள் அனைவரும் அசந்து போய் விட்டனர்.
கலைவாணர் நகைச்சுவை நடிகராக இருந்து கொண்டு அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட எல்லோரிடமும் நண்பராகப் பழகினார்.
தன்னைவிட வயதில் குறைவானவர்களிடமும், ஏழைப் பத்திரிகை நிருபர்களிடமும் சரிசமமாகப் பழகி வந்தார் என்.எஸ்.கே.