ஒரு முறை சாப்பிட்டால் திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் எள் பூரண கொழுக்கட்டை!

By Velmurugan

Published:

பொதுவாக விசேஷ நாட்களில் நாம் செய்யும் இனிப்பு பலகாரங்கள் சுவைக்காக மட்டுமில்லாமல் நம் உடல் நலத்திற்க்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இந்த விநாயகர் சதுர்த்திக்கு நாம் எள் வைத்து செய்யும் பூரண கொழுக்கட்டையை நம் வீட்டில் செய்து மகிழலாம்.

தேவையான பொருட்கள்:-

பச்சை அரிசி – 1 கப்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கருப்பு எள் – 1 கப்

முந்திரி – 6

பொடித்த வெல்லம் – 1 சிறிய கப்

ஏலக்காய் – 2

நெய் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் பச்சரிசி மாவை ஒரு மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். அதன் பின் அதனை நன்கு கழுவி சுத்தம் செய்து வடிகட்டி அரிசியை ஒரு காட்டன் டவலில் 30 நிமிடங்கள் பரப்பவும்.

அதன் பிறகு அந்த அரிசியை நன்கு அரைக்க வேண்டும். பின்பு அரிசியை சல்லடை கொண்டு சலித்து சுத்தம் செய்து கொள்ளலாம்.

இப்பொழுது நாம் ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீரை சூடுபடுத்த வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் நன்கு கொதி நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

அந்த சூடான தண்ணீரில் நாம் அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவை மெதுவாக சேர்க்க வேண்டும். மொத்தமாக மாவை தண்ணீரில் கொட்டினால் கட்டி கட்டியாக மாறிவிடும். அதனால் கவனமாக சிறிது சிறிதாக மாவை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

இப்பொழுது கொழுக்கட்டைக்கு தேவையான வெளிப் புறமாவு தயார். அடுத்ததாக நாம் கொழுக்கட்டை உள் வைக்க வேண்டிய பூரணத்தை தயார் செய்ய வேண்டும்.

இப்பொழுது பூரணம் தயார் செய்ய நமக்கு தேவையான அளவு எள்ளை நன்கு வெடிக்கும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின் முந்திரி, வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து கரடுமுரடாக அரைத்து கொள்ளவும்.

பின்பு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை சூடாக்கவும். அதில் இந்த பூர்ணத்தை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இப்போது சுவையான பூர்ணம் தயார்.

கொழுக்கட்டை தயார் செய்ய மாவை ஒரு சிறிய எலுமிச்சை அளவு உருண்டை ஆக எடுக்கவும்.

ரவை மட்டும் இருந்தால் போதும் 15 நிமிடத்தில் இனிப்பு ரவா கொழுக்கட்டை தயார்!

உங்கள் உள்ளங்கையில் எண்ணெய் தடவி மாவை மென்மையாக அழுத்தி உள்ளங்கையில் ஒரு வட்டை உருவாக்கவும். அதில் அரை ஸ்பூன் முழு பூரணத்தை கவனமாக வைக்கவும்.

அதை அனைத்து பக்கங்களும் சேர்த்து மூடி விட வேண்டும். இறுதியில் பந்து போன்ற கொழுக்கட்டை கிடைத்து விடும்.

இதை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். இப்போது ஆரோக்கியமான மற்றும் சுவையான பூர்ணம் கொழுக்கட்டை ருசிக்க தயார்…