தமிழ்த்திரை உலகில் நடிகைகளில் காமெடி வேடத்தில் அட்டகாசமாக நடித்து அசத்தியவர் மனோரமா. இவர் எம்ஜிஆர், சிவாஜி முதல் கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார். இவரைப் பிடிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து அசத்தியதால் இவரை ஆயிரம் திரை கண்ட ஆச்சி என்றும் சொல்வர்.
இவர் சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது. அப்படி என்னதான் நடந்தது என்று பார்ப்போமா…
சின்னத்தம்பி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மனோரமாவின் நடிப்பு அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கண்ணீர் விடச் செய்தது. விதவை கோலம். மஞ்சள் தண்ணீர் ஊற்றி குங்குமம் வைக்கும் காட்சி. ரொம்ப சீரியசாக நடித்தார் மனோரமா. என்னாச்சு என படக்குழுவினர் கேட்டனர். ஒண்ணுமில்லை. என் வாழ்க்கைக்கும் இந்தக் காட்சிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குற மாதிரி தோணுதுன்னு வேதனையுடன் சொன்னார்.
அவர் அப்படி சொன்ன போது அவரது கணவர் ராமநாதன் சென்னை ராயப்பேட்டையில் காலமாகி இருந்தார். ராமநாதன் மனோரமா தம்பதியினருக்கு பிறந்த முதலாவது குழந்தை ஆண். அப்போது ராமநாதன் ஜோசியம் பார்த்து விட்டு வந்து இந்தக் குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மனோரமாவுடன் சண்டை போட்டு வேறொரு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் மனோரமாவோ தன் குழந்தைக்காக வேறு திருமணம் செய்யாமல் வாழ்க்கையையே அர்ப்பணித்தார். அந்த வேளையில் தான் சின்னத்தம்பி படம் நடித்துக் கொண்டு இருந்தார். ராமநாதனும் காலமானார். தன்னைத் தவிக்க விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்த போதும் நேரில் சென்று கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் மனோரமா. அது மட்டுமல்லாமல் தன் மகன் பூபதியின் கையாலேயே அவரது உடலுக்கும் கொள்ளி போடச் செய்தார்.
அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் தான் வலி நிறைந்தவை. இளமையில் வறுமை. சில வருடங்களே நீடித்த மண வாழ்க்கை. அடி மேல் அடி. வலி மேல் வலி. நம்பிக்கை துரோகங்களே இவரது வாழ்க்கை. இருந்தாலும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தார் திரையுலகில் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக. எவ்வளவு பெரிய உயர்ந்த உள்ளம்? யாரால் இப்படி வலிகளை அடக்கி வைத்துக் கொண்டு நகைச்சுவையாக நடிக்க முடியும்?
ஒரு தடவை இவரது மகன் நாய் வளர்ப்பு குறித்து கேட்டார். அதற்கு மனோரமாவின் பதில் ஆணி அடித்தாற் போல இருந்தது. மனுஷனுங்க தான் நம்ப வச்சி ஏமாத்திடுறாங்க. ஆனால் இந்த வாயில்லா ஜீவனுங்க எக்காலத்துக்கும் நன்றி, விசுவாசத்தோடு இருக்கும்.
இவர் தனது கணவர் ராமநாதனை அம்மாவின் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருச்செந்தூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.