ஓணம் திருநாள் கேரளாவின் அறுவடை திருவிழா. இது வெளிநாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களை ஈரக்கிறது. இந்தப்பருவ காலத்தில் வழிபடுதல், இசை, நடனம், படகுப்போட்டி, விளையாட்டு என ஓணம் களைகட்டுகிறது.
இந்தப் பண்டிகை சின்னம் என்ற மலையாள மாதத்தில் அதாவது ஆகஸ்ட் இறுதியில், செப்டம்பர் துவக்கத்தில் துவங்குகிறது. இது ஒரு அறுவடைத் திருவிழா. ஓராண்டு காலம் கடின உழைப்புக்காகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் திருவிழா இன்றும், நாளையும் கொண்டாடப்படுகிறது. அதாவது 28 மற்றும் 29 ஆகஸ்ட் 23ல் இந்த விழா கேரளா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்திருவிழாவில் திருச்சூரில் வியப்பூட்டும் ஊர்வலம், பம்பை ஆற்றில் படகுப் போட்டி நடைபெறும். பெண்கள் ஒன்றாக சேர்ந்து ரங்கோலி மற்றும் பூக்கோலங்களை வீட்டின் முன் போடுவர்.
ஓணம் என்பது மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. முன்னொரு காலத்தில் மகாபலி கேரளாவை சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வந்தார். ஓணம் அன்று மகாபலி கேரளாவில் உள்ள மக்களைப் பார்வையிட வருவதாக ஐதீகம் உண்டு. கேரள மக்கள் இந்தப் பண்டிகையை ஒட்டி வீட்டை சுத்தம் செய்வர். புதுத்துணிகள் உடுத்தி மகிழ்வர்.
இது நம்மூர் தீபாவளிப் பண்டிகைக்குச் சமம். ஓணத்தன்று பலவகையான உணவுகள் தயார்செய்யப்பட்டு தளிர் வாழை இலைகளில் பரிமாறுவர்.
ஒவ்வொரு வீட்டின் முன்பும் பூக்களால் அலங்கரித்த கோலம் போடுவர். இதை அத்தப்பூ கோலம் என்பர். இந்தக் கோலமானது மகாபலிச்சக்கரவர்த்தியின் வருகையை ஒட்டி அவரை வரவேற்கும் விதத்தில் அலங்கரிக்கப்படுகிறது. ஓணத்தையொட்டி முந்தைய நாளில் பாரம்பரிய வழிபாடுகள் நடக்கின்றன.
இந்தப் பண்டிகையின் சிறப்பு விருந்துகளில் ஒன்று பாயாசம். படகுப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அந்தப் படகில் உள்ள பட்டுக்குடையில் தங்க நாணயம் இருக்கும். அதுதான் பரிசு. அப்படி போட்டியில் ஜெயிக்க படகுகள் விறுவிறுப்பாக ஆற்றில் செல்வதைப் பார்க்க ரம்மியமாக இருக்கும்.
இத்திருவிழா இனம், மதம் பாகுபாடின்றி அனைவரையும் ஒன்றிணைக்கிறது. இன்றைய நாளில் ஆலப்புழாவிலும் படகுப்போட்டி தடபுடலாக நடக்கிறது. பம்பா நதியின் கரைகள் ரசிகர்களால் நிரம்பி வழியும். இந்தப் போட்டியில் ஒரு கிராமம் வெற்றி பெற்றால் அந்தக் கிராமமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.
அதே நேரம் தோற்ற அணியுடன் எந்த விதப் பகைமையும் இருக்காது. 4 மாலுமிகள், 100 துடுப்புப் போடுபவர்கள், 25 பாடகர்கள் என அனைவரும் 100 அடி பாம்பு போல நீண்டு காட்சியளிக்கும் சுங்கம் வல்லம் என்ற படகில் செல்வர். ஒரே ஆட்டம், பாட்டம், கும்மாளம் தான். மக்கள் குதூகலம் நிறைந்து காணப்படுவர். அலங்கரிக்கப்பட்ட படகுகள் தண்ணீரில் செல்வது நம் கண்களுக்கு விருந்து.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருநாள் 29.08.2023 அன்று செவ்வாய்க்கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் இனிய ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..!