சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாண்டியன்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிக் கொண்டிருந்த நிலையில் படம் முடிவடைய பத்து நாட்கள் இருந்தபோது, கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில் திடீரென அவருடைய மனைவி காலமாகிவிட்டார். இருப்பினும் மனைவியின் மறைவு சோகத்தை ஒருபுறம் வைத்துக்கொண்டு மனைவி இறந்த மூன்றாவது நாளே மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து அந்த படத்தை இயக்கி முடித்தார். திட்டமிட்டபடி அந்த படம் ரிலீஸானது.
ரஜினிகாந்த், குஷ்பு, ஜனகராஜ், பிரபாகர், வினு சக்கரவர்த்தி, சரண்ராஜ் உள்பட பலரது நடிப்பில் உருவான படம் தான் ‘பாண்டியன்’. இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ரஜினியுடன் ஜெயசுதா நடித்திருப்பார். இவர் தான் ‘வாரிசு’ படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதையில் உருவான இந்த படம் எஸ்.பி.முத்துராமனின் விசாலம் புரொடக்சன்ஸால் தயாரிக்கப்பட்டது. இந்த படம் எஸ்.பி.முத்துராமன் மற்றும் அவரது குழுவில் இருந்த 15 பேர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. இந்த படம் தொடங்குவதற்கு முன் எஸ்.பி.முத்துராமன் ரஜினியை சந்தித்து என்னை நம்பி பல வருடங்களாக இருக்கும் எனது குழுவினர்களுக்காக ஒரு படம் எடுக்க விரும்புகிறேன். நீங்கள் அதில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
கண்டிப்பாக நடித்து தருகிறேன் என்று வாக்கு கொடுத்த ரஜினி அதன்படியே நடித்துக் கொடுத்தார். இந்த படத்தில் கிடைக்கும் இலாபத்தை எஸ்.பி.முத்துராமன் மற்றும் அவரது குழுவினர் 15 பேர்களும் பிரித்துக் கொள்வது என்ற ஒப்பந்தத்துடன்தான் படம் தொடங்கப்பட்டது.
அக்கா தம்பி பாசத்தை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. அக்காவாக ஜெயசுதா, தம்பியாக ரஜினிகாந்த் நடித்தார்கள். ‘பாம்பே தாதா’ என்ற கன்னட படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் இந்த படத்தின் வெற்றிக்கு கை கொடுத்தது.
‘உலகத்துக்காக’, ‘அடி ஜும்பா’, ‘அன்பே நீ என்ன’, ‘பாண்டியனா கொக்கா கொக்கா’, ‘பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா’ ஆகிய பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தன. பாண்டியனின் ராஜ்யத்தில் என்ற பாடலை கார்த்திக் ராஜா கம்போஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கு இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தும் வாய்ப்பு கிடைக்காதது ஏன்? தேவாவின் இசை வாழ்க்கை..!
இந்த படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்ற போதிலும் வசூல் அளவில் வெற்றி பெற்றது. ரஜினிக்காக மாஸ் காட்சிகளை பார்த்து பார்த்து எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் கடற்கரைச் சாலையில் ஒரு அட்டகாசமான காட்சி படமாக்கப்பட வேண்டிய நிலை இருந்தது. ரஜினியை போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்வதும், அதேபோன்று வில்லனை ரஜினி கைது செய்து அழைத்துப் போவது போன்ற இரண்டு காட்சிகளை படமாக்க வேண்டிய நிலை இருந்தது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடற்கரை சாலையில் படமாக்க எஸ்.பி.முத்துராமன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. அப்போதுதான் பாண்டிச்சேரி கடற்கரையில் இந்த காட்சியை படமாக்க முடிவு செய்யப்பட்டது. பாண்டிச்சேரி அரசு அதிகாரியாக இருந்த தனது நண்பர் ஒருவரை எஸ்.பி.முத்துராமன் தொடர்பு கொண்டார். அப்போது முதலமைச்சராக இருந்த வைத்திலிங்கம் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு உதவி செய்தார். நான்கு மணி நேரம் கடற்கரை சாலையில் போக்குவரத்தை நிறுத்தி அங்கு இந்த படம் படமாக்கப்பட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சென்னை துறைமுகத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் எஸ்.பி.முத்துராமனின் மனைவி மறைந்து விட்ட செய்தி அவருக்கு சொல்லப்பட்டது. அவர் படப்பிடிப்பை நிறுத்தாமல் ஸ்டண்ட் இயக்குனரை கூப்பிட்டு இந்த சண்டைக் காட்சியை முடித்து விடுங்கள் என்று கூறிவிட்டு வீடு சென்றார்.
தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் எஸ்.பி.முத்துராமன் தனது மனைவி இறந்ததால் படத்தை இயக்க முடியாத நிலையில் இருந்தார். அப்போது ரஜினி ‘உங்களை நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் அதே நேரத்தில் இந்த படம் தீபாவளியன்று வெளியானால் தான் அதிக வசூல் கிடைக்கும், நீங்கள் உங்கள் குழுவினருக்காக எடுக்கும் படம், அவர்களின் நன்மைக்காக நீங்கள் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். எந்த முடிவை எடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார்.
அதன்பிறகு அவர் மனைவி இறந்த சோகத்தை மனதில் வைத்துக்கொண்டு மூன்றாவது நாளே படப்பிடிப்புக்கு வந்து இந்த படத்தை முடித்துக் கொடுத்தார். இந்த படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியானது.
இளையராஜா பின்னணி இசை செய்ய மறுத்த ரஜினி படம்.. ஏவிஎம் செய்த புத்திசாலித்தனமான செயல்..!
இந்த படம் வெளியான அதே தேதியில்தான் கமல்ஹாசன் நடித்த ‘தேவர்மகன்’, பிரபு நடித்த ‘செந்தமிழ் பாட்டு’, சத்யராஜ் நடித்த ‘திருமதி பழனிச்சாமி’, பாக்யராஜ் இயக்கி நடித்த ‘ராசுக்குட்டி’ ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த படத்திற்கு சில நெகட்டிவ் விமர்சனங்களை ஊடகங்கள் தந்திருந்தாலும் இந்த படம் வசூலில் பிரமாதமாக இருந்தது. அந்தப் பணத்தை முழுவதுமாக எஸ்.பி.முத்துராமன் தனது குழுவினருக்குப் பிரித்துக் கொடுத்தார்.