ஒரு பிரபல ஹீரோவின் ஒரு திரைப்படம் வெளியாகி அந்த படம் சூப்பர் ஹிட் ஆவதே அரிதாக இருக்கும் நிலையில் மோகன் என்ற நடிகரின் படம் ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாகி மூன்றுமே வெற்றி பெற்றது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை. ரஜினி, கமல் கூட செய்யாத இந்த சாதனையை மோகனின் திரைப்படங்கள் ஒரு காலத்தில் செய்தது என்றால் அது மிகவும் ஆச்சரியத்தக்க விஷயமாகும்.
நடிகர் மோகன், பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான ‘மூடுபனி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ‘மூடுபனி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை எடுத்து அவர் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘கிளிஞ்சல்கள்’ ஆகிய படங்களில் நடித்தார்.
எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த படம்.. திடீரென ரஜினி – அம்பிகா நடிக்கும் படமாக மாறியது எப்படி?
மோகனுக்கு சூப்பர் ஹிட் படமாக முதலில் அமைந்தது ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற திரைப்படம்தான். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்துதான் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. மோகனின் படங்கள் ஒன்று சூப்பர் ஹிட் ஆகும் அல்லது முதலுக்கு மோசம் இல்லை என்ற வகையில் சிறிய லாபத்தையாவது கொடுக்கும் என்ற நிலையில் இருந்தது.
இந்த நிலையில்தான் கடந்த 1985ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் மோகன் நடித்த மூன்று திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸானது. ஒரு ஹீரோவின் மூன்று படங்கள் வெளியாவது என்பது தமிழ் திரை உலகில் மிகவும் அரிதான ஒன்று என்பதும் அப்படியே வெளியானாலும் மூன்று திரைப்படங்களும் வெற்றி பெறுவது என்பது இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் நடை பெறாத ஒரு சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1985ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, ‘உதயகீதம்’, ‘பிள்ளை நிலா’ மற்றும் ‘தெய்வப்பிறவி’ ஆகிய மூன்று மோகன் படங்கள் வெளியானது. இதில் ‘உதய கீதம்’ திரைப்படம் கோவை தம்பி தயாரிப்பில் மோகன், ரேவதி, லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் இளையராஜாவின் இசையில் உருவான படம். இந்த படம் இளையராஜாவின் 300வது படம். இந்த படம் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடி சாதனை செய்தது.
இரண்டாவதாக இதே நாளில் வெளியான திரைப்படங்களில் ஒன்று ‘பிள்ளை நிலா’. கலைமணி கதை, வசனம் எழுதிய இந்த படத்தை மனோபாலா இயக்கியிருந்தார். காதல் மற்றும் த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிரட்டலான வெற்றி பெற்றது.
பிரபுவின் முதல் படமும் தோல்வி… 100வது படமும் தோல்வி… சிவாஜி கணேசன் தான் காரணமா?
அதுவரை மோகன் ரொமான்ஸ் படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் முதன்முதலாக த்ரில் கதையம்சம் கொண்ட படத்தில் நடித்தார். இது அவருக்கே ஒரு புது அனுபவம் தான். இந்த படத்தில் நடிக்கும் போது மோகனிடம் கால்ஷீட் இல்லை.
ஆனால் மனோபாலா கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த படத்தில் நான் இரவில் மட்டும் நடித்து தருகிறேன் என்று மோகன் கூறினார். அதன்படி இந்த படத்தில் உள்ள பெரும்பாலான காட்சிகள் இரவில் நடக்கும் படியாக திரைக்கதை அமைக்கப்பட்டது. ராதிகா, நளினி பேபி ஷாலினி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இதனை அடுத்து 1985ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான இன்னொரு படம் ‘தெய்வ பிறவி’. பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மோகன், ராதிகா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சங்கர் கணேஷ் இசையமைப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு வெற்றி பெற்று தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபத்தை தந்தது. பல நகரங்களில் 100 நாட்கள் ஓடியது.
இளையராஜா பின்னணி இசை செய்ய மறுத்த ரஜினி படம்.. ஏவிஎம் செய்த புத்திசாலித்தனமான செயல்..!
அந்த வகையில் 1985ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினம் என்பது மோகனின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு ஆண்டாக அமைந்தது. உதயகீதம், பிள்ளை நிலா, தெய்வ பிறவி என மூன்று படங்கள் வெளியாகி மூன்றுமே வெற்றி பெற்றுள்ளது. 38 ஆண்டுகள் ஆகிய பின்னரும் இந்த மூன்று படங்கள் இன்று பார்த்தால் கூட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.