உணவு பலருக்கும் பிடித்த விஷயமாக இருந்தாலும் அந்த உணவினை சமைப்பது என்பது பலருக்கு அலர்ஜியான விஷயமாகத்தான் இருக்கிறது. சமையலில் உண்மையான ஆர்வத்தோடு சமைப்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும் வேறு வழியின்றி சமைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தால் சமையலை கற்றுக் கொண்டு இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். புதிதாக சமைக்க தொடங்குபவர்களுக்கு ஏதோ ஆய்வுக்கூடத்தில் நடக்கும் ஆராய்ச்சி போலத்தான் சமையல் தோற்றமளிக்கும். சமையலை கற்றுக் கொண்ட புதிதில் பலரும் பொதுவாக செய்யும் சில தவறுகள் உண்டு அவை என்னென்ன என்று அறிந்தால் சமையலில் சொதப்பாமல் தப்பிக்கலாம்.
1. செய்முறையை முழுமையாக படிக்காமல் சமைக்க தொடங்குவது:
பலரும் சமைக்க வேண்டும் என்ற முடிவெடுத்தபின் செய்முறை அறிய நாடுவது இணையதளத்தை தான். இணையதளத்தில் ரெசிபியை படிக்கும் பொழுதோ அல்லது கேட்கும்பொழுதோ முழுவதுமாக கவனிக்காமல் ரெசிபியை பார்த்துக் கொண்டே செய்ய தொடங்குவது.
சில ரெசிபிகளில் செய்ய ஆரம்பித்தபின் முதல் நாள் இரவே ஊற வைத்த பட்டாணியை சேர்க்கவும் என்று வரும் பொழுது நாம் முதல் நாள் இரவுக்கு திரும்ப முடியாது. எனவே ரெசிபியை முழுதாக பார்த்துவிட்டு என்னென்ன பொருட்கள் நம்மிடம் இருக்கின்றன? எப்படி செய்யலாம்? என்பதை திட்டமிட்டு அதன் பின் சமைக்கத் தொடங்கவும்.
2. சரியான கொள்ளளவுள்ள பாத்திரத்தை தேர்வு செய்வது:
அனைத்து சமைக்க தேவையான பொருட்களையும் சேர்த்து உணவு சமைப்பதற்கு பாத்திரம் போதுமான கொள்ளளவு உடையதா என்பதை சிந்தித்து சமைக்க தேவையான கடாய், குக்கர் அல்லது பாத்திரத்தை தேர்வு செய்யவும்.
3. சமைக்க தேவையான பொருட்களை தயாராக வைத்தல்:
புதிதாக சமைக்க தொடங்குபவர்கள் சமையலை ஆரம்பிக்கும் முன்பு சமைக்க தேவையான பொருட்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். ரெசிபியில் பூண்டு சேர்க்கவும் புதினா சேர்க்கவும் என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம். ஆனால் இவற்றை அப்படியே சேர்க்க முடியாது. பூண்டினை தோலுரித்து வைத்திருக்க வேண்டும், புதினாவை இலைகளை ஆய வேண்டும். நல்ல கைதேர்ந்த சமையல் அறிந்தவர் இதனை வேகமாக செய்து விடுவர். புதிதாக கற்பவர் முதலிலேயே எல்லாவற்றையும் செய்து தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம்.
4. உப்பு:
உப்பு இல்லாத பண்டம் குப்பைத்தொட்டியிலே என்று கூறுவார்கள். எப்படி உப்பு போதவில்லை என்றால் உணவின் சுவை நன்றாக இருக்காதோ அதேபோல் அதிக அளவு உப்பு போட்டு விட்டாலும் உணவினை உண்பது என்பது இயலாத காரியம். எனவே உப்பு போடும் பொழுது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு போடுங்கள் என்று கூறப்பட்டிருந்தால் உணவினை அவ்வப்போது ருசி பார்த்து உப்பினை கவனமாய் போடுங்கள்.
5. உணவு தயாராவதற்கு நேரம் கொடுங்கள்:
பத்து நிமிடம் மூடி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் பத்து நிமிடங்கள் அந்த உணவினை மூடி போட்டு அப்படியே வைத்து விடுங்கள். அவ்வப்போது திறந்து பார்ப்பது அதனை கிளறிக் கொண்டே இருப்பது போன்றவை வேண்டாம். அதேபோல் குறைவான தீயில் சமைக்க வேண்டிய உணவை குறைந்த தீயில் மட்டுமே சமையுங்கள். உங்களின் அவசரத்திற்காக அடுப்பை அதிக தீயில் வைத்து சமைக்க வேண்டாம். ஒவ்வொரு பொருளும் அது தயாராக சில குறிப்பிட்ட நேரத்தை எடுத்துக் கொள்ளும். அந்த நேரத்தை விட மிக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சமைக்காமல் சரியான அளவு சமையுங்கள்.
7. கவனச்சிதறல்:
உணவை சமைத்துக் கொண்டே வேறு வேலைகளை பார்ப்பதை அறவே தவிர்த்து விடுங்கள். மொபைல் பார்ப்பது அல்லது தொலைக்காட்சி பார்ப்பது இல்லை வேறு வேலைகளில் மூழ்குவதோ வேண்டாம். கவனக்குறைவோடு இருந்தால் உணவு அடிப்பிடித்து விட அதிக வாய்ப்புகள் உண்டு.
சமையல் என்பது பெண்களுக்கானது ஆண்களுக்கானது என்று எந்த பாலினத்தவரையும் சாராமல் உணவு எப்படி அனைவருக்கும் பொதுவானது அதுபோல் சமையலும் பொதுவானது என்ற கருத்து தற்காலத்தில் எல்லோரிடத்திலும் உள்ளது ஆரோக்கியமான விஷயம். ஆரம்பத்தில் கடினமாக தோன்றினாலும் ஆர்வத்துடன் செய்தால் சமையல் எளிமையான ஒன்றுதான்.