பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் ஒரு அருமையான கதையை வைத்து அதற்கு இரண்டு நாயகர்களை தேடிக்கொண்டிருந்த போதுதான் அவரது உதவியாளர்கள் கமல், ரஜினி இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் கூறினர். ஒரே படத்தில் கமல் ரஜினி வேண்டவே வேண்டாம் என்று ஸ்ரீதர் கூறியதாகவும் ஆனால் உதவியாளர்கள் அவரை சமாதானப்படுத்தி இந்த படத்தில் கமல், ரஜினியை நடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த உதவியாளர்தான் இன்று பிரபலமாக இருக்கும் சந்தான பாரதி மற்றும் பி.வாசு.
உண்மையான காதல், நட்பு, சபலம், நம்பிக்கை, சந்தேகம் என பல உணர்ச்சிகரமான காட்சிகளை வைத்து ஸ்ரீதர் திரைக்கதையில் புகுந்து விளையாடிய படம் தான் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’.
இந்த கிளைமாக்ஸ் ரஜினிக்கு செட் ஆகாது.. கணித்து சொன்ன நடிகர்.. மாற்ற மறுத்ததால் தோல்வி அடைந்த படம்..!

இந்த படத்தின் மைய கேரக்டர் ஸ்ரீபிரியாதான். அவரது நடிப்பிற்கு முழுமையாக தீனி போட்ட படம் இது. அதேபோல் கமல்ஹாசன் மிகவும் உருக்கமான, அதே சமயத்தில் ரொமான்ஸ் கேரக்டரிலும், ஸ்டைலான அதகளப்படுத்தும் கேரக்டரில் ரஜினியும் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தின் இன்னொரு நாயகியாக ஜெயசித்ரா நடித்திருந்தார். அவரது கேரக்டரும் மிக அபாரமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் வில்லன் கிடையாது, பழிவாங்கும் ரத்தக்களறி கிடையாது, ஸ்டண்ட் காட்சிகள் கிடையாது, காமெடிக்கு என தனி டிராக் கிடையாது. ஆனால் படத்தில் இவை அனைத்தும் இருக்கும் என்பதுதான் ஸ்ரீதரின் திரைக்கதையின் முக்கிய அம்சம்.

நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, கல்யாண பரிசு போன்ற காலத்தால் அழியாத காவிய படங்களை கொடுத்தவர் ஸ்ரீதர். அப்படி ஒரு இயக்குனர் கமல், ரஜினி ஆகிய இருவருக்கும் ஒரு மறக்க முடியாத படத்தை கொடுத்தார் என்றால் அது இளமை ஊஞ்சலாடுகிறது படம்தான்.
பணக்கார வீட்டு பையன் ரஜினி, அவர் வீட்டில் கமல் ஒரு அனாதையாக வளர்கிறார். ரஜினி நிறுவனத்தில் கமல் மேனேஜராகவும் இருக்கிறார். இருவரும் மிகவும் மிகச் சிறந்த நண்பர்களாகின்றனர். இந்த நிலையில்தான் கமல் ஸ்ரீபிரியாவை காதலிக்கிறார். இந்த நிலையில் கமல் ஸ்ரீபிரியாவை காதலிக்கிறார் என்று தெரியாமல் ரஜினியும் அவரை ஒருதலையாக காதலிக்கிறார்.
இந்த நிலையில் தோழி ஜெயசித்ராவின் வீட்டுக்கு ஸ்ரீபிரியா சென்று தங்குகிறார். இந்நிலையில் ஸ்ரீப்ரியாவை பார்ப்பதற்க்காக ஜெயசித்ராவின் வீட்டிற்கு கமல் வருவார். அப்போது ஸ்ரீப்ரியா ஒரு திருமணத்திற்காக சென்று இருக்கும் நிலையில் இளம் விதவையாக இருக்கும் ஜெயசித்ரா மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். அப்போது கமல் அங்கே ஜெயசித்ராவை பார்க்கின்றார்.

அப்போது ஜெயசித்ராவினால் கமல் சபலத்தில் விழுந்துவிடுவார். அதன்பின் குற்ற உணர்ச்சி காரணமாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு கிளம்பி விடுவார்.
ஆனால் தற்செயலாக அந்த கடிதம் ஸ்ரீபிரியா கையில் கிடைத்துவிடும். இந்த நிலையில் தான் கமலை ஸ்ரீப்ரியா வெறுக்க ஆரம்பிப்பார். அப்போது ரஜினி அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாவார். அதே வேளையில் கமலுக்கு ஜெயசித்ரா எழுதும் கடிதமும் ரஜினி கையில் கிடைக்க, கமல் நம்பிக்கை துரோகி, கெட்டவன் என்று ரஜினி நினைப்பார்.
ஒரு கட்டத்தில் ரஜினியின் வீட்டை விட்டு வெளியேறி ஜெய்சித்ராவை தேடி கமல் செல்ல, அங்கே அவர் இறந்த கோலத்தில் இருக்கும் போது அவருக்கு தாலி கட்டி அவரை மனைவியாக ஏற்றுக் கொள்வார். இதனை அடுத்து மீண்டும் ரஜினியின் வீட்டிற்கு வந்து மேனேஜராக வேலை பார்ப்பார்.
அப்போதுதான் ரஜினிக்கு கமலும் ஸ்ரீபிரியாவும் ஏற்கனவே காதலர்கள் என்பது தெரிய வரும். அதன் பிறகு சில முக்கியமான காட்சிகளுடன் இறுதியில் கமலையும் ஸ்ரீபிரியாவையும் ரஜினி சேர்த்து வைப்பது போல் கதை முடியும்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. ஸ்ரீதர் தன்னுடைய அனைத்து படங்களுக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களைத்தான் இசையமைப்பாளராக புக் செய்வார். ஆனால் இந்த படத்தில் வித்தியாசமாக இளையராஜாவை ஒப்பந்தம் செய்தார்.
‘என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு’, ‘ஒரே நாள் உன்னை நான்’, ‘கிண்ணத்தில் தேன்’, ‘நீ கேட்டால் நான்’, ‘தண்ணி கருத்துருச்சு’ ஆகிய ஐந்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இப்போது கேட்டால் கூட அந்த பாடல்கள் அனைத்தும் தேனாக இனிக்கும்.
20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!
1978ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ஸ்ரீதருக்கு மட்டுமின்றி கமல், ரஜினி ஆகிய இருவருக்குமே மறக்க முடியாத, அதே சமயத்தில் வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் வெளியாகி தற்போது 45 வருடங்களாகியும் இன்னும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால்கூட மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்படும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
