இன்று (3.8.2023) ஆடிப்பெருக்கு. மங்கலகரமான நாள். பொன்னான நாள். இன்று தொட்டதெல்லாம் துலங்கும். தாலிக்கயிறு மாற்றும் நேரம், செய்ய வேண்டிய வழிபாடு பற்றி பார்ப்போம்.
இன்று எந்த நல்ல காரியங்கள் வேண்டுமானாலும் தொடங்கலாம். அத்தனை விசேஷமான நாள். அதுவும் ஆடி மாதத்திற்கே உரியது தான் இந்த ஆடி 18ம் பெருக்கு.
ஆடி மாதத்தில் எந்த நல்லதும் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். சாமி மட்டும் தான் கும்பிடணும் என்றும் சொல்வார்கள். ஆனால் இந்த நாளில் மட்டும் எந்த நல்லதையும் செய்யலாம். தங்கம் வாங்குவது, பொருள்கள் வாங்குவது, கார், டூவீலர் வாங்குவது, புதிதாக வீடு கட்டத் தொடங்குவது, புதிதாக கடை துவங்குவது என எதையும் செய்யலாம்.
உங்களால் எதை எளிமையாக வாங்க முடியுமோ அதை வாங்கலாம். சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளவர்கள் தங்கம் வாங்கலாம். ஆனால் இது கட்டாயம் கிடையாது. உப்பு, மஞ்சள் என்ற இந்த ரெண்டு பொருளையும் கண்டிப்பாக வாங்குங்க. இது நிச்சயம் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும், சிறப்பையும் உண்டாக்கும்.
விவசாயிகளுக்கு உயிர்நாடியாக விளங்கும் அன்னை காவிரித் தாயைப் போற்றி வணங்கக்கூடிய நாளும் இதுவே. கங்கையில் ஆரம்பித்து காவிரி வரை எல்லா நதிகளும் புனிதமானவை தான். நதித்துறைக்குப் போய் பூஜை பண்ணுங்க. அங்கு போக முடியாதவர்கள் வீட்டில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் நீரை நிரப்பி மஞ்சளைப் போட்டு சில பூக்களைத் தூவி அதைக் காவிரித்தாயாக உருவகப்படுத்திப் பூஜை பண்ணுங்க.
வீட்டில் உள்ள மோட்டர், பைப், டேங்க் இவற்றில் சந்தனம், குங்குமம் இட்டு பூஜை பண்ணி வணங்கலாம். நைவேத்தியமாக ஏதாவது ஒரு பழங்களை வைக்கலாம். இது நாவல் பழ சீசன் என்பதால் அதையும் வைத்து வழிபடலாம்.
இந்த நாளில் தாலிக்கயிறு மாற்றுவது விசேஷம். தஞ்சாவூர், மயிலாடுதுறை போன்ற ஊர்களில் பழைய தாலியை பிள்ளையார் பக்கத்தில் வைத்து பூஜித்து பெரியவங்க கையால் மாட்டிக் கொள்ளலாம்.
கணவர் இருந்தால் அவர் கையால் மாற்றிக் கொள்ளலாம். கணவர் வெளியூர்ல இருந்தால் வீட்டில் உள்ள பெரியவங்க கையால் மாற்றலாம். திருமாங்கல்யத்துக்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்து எல்லா நலமும் உண்டாக வேண்டிக் கொண்டு தாலிப்பெருக்கிக் கட்டிக் கொள்ளலாம். இன்று காலை 10.35 மணி முதல் 11.45 வரை நல்ல நேரம்.
இந்த நேரத்தில் தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம். மதியம் இலை போட்டு வழிபாடு செய்பவர்கள் 12.00 மணி முதல் 1.20 வரை செய்யலாம். பொதுவாகவே தாலிக்கயிறு பொழுது இறங்கும் நேரத்தில் மாற்றக்கூடாது. அதனால் தான் காலை 6 மணி முதல் 12 மணி வரைக்கும் மாற்றிக் கொள்ளலாம். வியாழக்கிழமை என்பதால் 10.35 மணிக்கு மேல் நல்ல நேரத்தில் செய்து கொள்ளலாம்.
இன்று வடை பாயாசத்துடன் இலை போட்டு படைத்து வழிபாடு செய்யலாம். சமீபத்தில் கயிறு மாற்றிவயர்கள் புதுக்கயிறை மாட்டிக் கொண்டு பழைய தாலிக்கு பூஜை செய்து மீண்டும் மாட்டிக் கொள்ளுங்கள். இன்று தொட்டதெல்லாம் துலங்கும் என்பதால் அம்மனை வேண்டிக்கொண்டு நல்ல காரியங்களைச் செய்து வாழ்வில் எல்லா வளமும் பெற்று மகிழ்வோமாக.