ஆடி மாதம் வந்துவிட்டாலே பலரது நினைவுக்கும் வருவது அம்மன் திருக்கோயில்கள்தான். தமிழ் மாத நாள்காட்டின்படி நான்காவது மாதம் ஆடி மாதமாகும். இந்த ஆடி மாதத்தில் திருமணம் போன்ற எந்த விதமான நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. ஆடி மாதம் முழுக்க தெய்வீக பணிகளுக்காக சமர்ப்பிக்கப்படுகிறது. குறிப்பாக ஆடி வெள்ளி அம்மனுக்கு உகந்த நாளாகும்.
அம்மன் கோவில்களில் சென்று வழிபடுதல் அல்லது வீட்டிலேயே அம்மனை வணங்கி பூஜித்தல் போன்றவை நடைபெறும். வீட்டில் அம்மனுக்கு பூஜை செய்வோர் சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்கள் நெய்வேத்தியம் செய்து படைப்பர். வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் அடங்கிய தாம்பூலத்தினை அருகில் உள்ள பெண்களுக்கு அளித்து மகிழ்வர். அம்மனை அலங்கரித்தல், எலுமிச்சம் பழத்தில் மாலை கோர்த்து அணிவித்தல் போன்றவையும் நடைபெறும். நெய் தீபம் ஏற்றி அந்த அம்மனை மனதார வணங்கிடுவர்.
ஆங்கில மாதமான ஜூலை மாதத்தின் பாதியில் தொடங்கி ஆகஸ்ட் மாதத்தின் பாதி வரை இருக்கும் இந்த ஆடி மாதத்தில் மொத்தம் ஐந்து வெள்ளிக்கிழமைகள் வருவதுண்டு. இதில் ஒவ்வொரு வெள்ளியும் ஒவ்வொரு சக்தி வடிவமான அம்மனுக்கு உகந்தது.
ஆடி மாதத்தின் முதல் வெள்ளி ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு உகந்தது. சொர்ணாம்பிகை அம்மன் பார்வதியின் வடிவம் ஆவாள். மக்களுக்கு செல்வத்தையும் வளத்தையும் அள்ளித் தரக்கூடிய கடவுளாக ஸ்வர்ணாம்பிகை அம்மன் விளங்குகிறார்.
ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளி காளிதேவிக்கு உகந்ததாகும். காளிதேவியானவள் அறிவுக்கூர்மை, வலிமை, அளவு கடந்த அன்பு, தைரியம் போன்றவற்றின் வடிவமாக திகழ்கிறாள். காளி தேவியை ஆடி வெள்ளி அன்று மனமுருக வேண்டுபவர்கள் நல்ல அறிவாற்றலோடு திகழ்வார்கள்.
ஆடி மாதத்தின் மூன்றாம் வெள்ளி காளிகாம்பாளுக்கு உகந்தது. காளிகாம்பாள் பார்வதி தேவியின் வடிவம். உடல் ஆரோக்கியத்தையும் மனவலிமையையும் தரக்கூடிய கடவுளாக காளிகாம்பாள் விளங்குகிறாள்.
ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளி சக்தி வடிவமான காமாட்சி அம்மனுக்கு உகந்தது. காமாட்சி அம்மன் உறவுகளை மேம்படுத்தக்கூடிய அம்மன். காமாட்சியம்மன் திருமணத்தில் உள்ள தடைகளை நீக்கி விரைவில் திருமணம் கை கூடவும், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிடைப்பதற்கும் அருள் புரிந்திடுவாள்.
கருவை காத்தருளும் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்… திருக்கருகாவூரில் உள்ள முல்லைவனநாதர் கோவிலின் சிறப்பு…!
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் நாளாகும். வரலட்சுமி விரதம் என்பது திருமணம் ஆன பெண்களால் கொண்டாடப்படக்கூடிய முக்கிய விரதம் ஆகும். வரலட்சுமி விரதம் ஒட்டுமொத்த குடும்பத்தின் நலனுக்காகவும் செய்யக்கூடிய விரதம்.
இப்படி ஒவ்வொரு வெள்ளியும் ஒவ்வொரு சிறப்பையும் ஒவ்வொரு அம்மனையும் உடைய ஆன்மீக பக்தர்களுக்கு உகந்த மாதம் ஆகும். அம்மனை வேண்டி முழு மனதோடு வழிபட்டு ஆடி மாதத்தின் முழு பலனையும் பெறுவோம்.