கருவை காத்தருளும் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்… திருக்கருகாவூரில் உள்ள முல்லைவனநாதர் கோவிலின் சிறப்பு…!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசத்திற்கு அருகில் உள்ள திருக்கருகாவூர் என்னும் ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்தான் முல்லைவனநாதர் கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அம்மன் கர்ப்பரட்சாம்பிகை. அம்மனின் பெயரைப் போலவே கர்ப்பத்தை காத்து அருளும் தாயாக இந்த அம்மன் விளங்குகிறார்.

நீண்ட நாளாக திருமணம் ஆகாத பெண்கள் விரைவில் திருமணம் நடப்பதற்கும், திருமணம் ஆகியும் கரு உண்டாகாமலோ அல்லது உண்டாகும் கரு அடிக்கடி கலைந்து போனாலும் அவர்களுக்கு நல்லபடியாக கரு உண்டாகி குழந்தை செல்வம் கிடைப்பதற்கு இந்த திருத்தலத்திற்கு வந்து அம்மனின் அருளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெற்று வருகிறார்கள்.

கர்ப்பரட்சாம்பிகை

முல்லைவனம் நிறைந்த பகுதியில் இந்த திருத்தலம் இருப்பதால் இக்கோவிலில் இருக்கும் சிவபெருமானை முல்லைவன நாதர் என்று அழைக்கிறார்கள். சிவபெருமானின் லிங்கத்தின் மேல் முல்லைக்கொடி படர்ந்து இருந்ததனால் உண்டான வடுக்கள் இன்றும் சிவலிங்கத்தின் மேல் பார்க்கலாம். இங்கு உள்ள சிவபெருமானின் திருமேனியானது புற்று மண்ணால் உருவானதாக கூறப்படுகிறது.  சிவபெருமானின் சன்னதிக்கு இடது புறம் அம்மன் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த கர்ப்பரட்சாம்பிகை தாயை காண தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாமல் இருக்கும் தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து நெய்யால் மெழுகி கோலம் இட்டு அம்மனை வேண்டி செல்கிறார்கள். அம்மனின் பாதத்தில் வைத்து பூஜித்து தரப்படும் நெய்யை தொடர்ந்து இரவில் 48 நாட்களுக்கு உண்டு வந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் மீண்டும் அந்த குழந்தையுடன் கோயிலுக்கு வந்து குழந்தையை தங்க தொட்டிலில் இட்டும்,  எடைக்கு எடை கற்கண்டு, சக்கரை, வாழைப்பழம், பணம் போன்றவற்றை துலாபாரம் செய்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

பல கர்ப்பிணி பெண்கள் இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்து விளக்கெண்ணெய் பெற்று செல்கிறார்கள். இந்த விளக்கெண்ணையை வயிற்றில் தடவுவதன் மூலம் சுகப்பிரசவம் உண்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

தல வரலாறு:

images 3 23

முன்பு ஒரு காலத்தில் நிருத்துவர் என்னும் முனிவரும் அவரது மனைவி வேதிகை என்பவரும் இவ்வூரில் வாழ்ந்து வந்துள்ளனர். நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாமல் இருந்த இவர்களுக்கு ஒரு நாள் குழந்தை பேறு கிட்டியது.

கர்ப்பிணியாய் இருந்த தன் மனைவி வேதிகையை ஆசிரமத்தில் விட்டு விட்டு முனிவர் வெளியில் சென்ற பொழுது ஊர்த்துவ பாதர் என்னும் முனிவர் உணவு வேண்டி அந்த ஆசிரமத்திற்கு வந்துள்ளார். கர்ப்பிணியாய் இருந்த வேதிகைக்கு உடல் சோர்வு ஏற்பட்டதன் காரணமாக உடனடியாய் முனிவரை கவனிக்க தவறிவிட்டார். இதனால் கோபம் கொண்ட முனிவரோ வேதிகைக்கு சாபமிட்டு சென்றுவிட்டார்.

சாபத்தினால் வேதிகையின் கரு கலைந்தது. வேதியையோ தன் நிலையை அம்மனிடம் முறையிட்டார் அம்மன் அந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து காத்து முழு குழந்தையானதும் வேதிகையிடம் ஒப்படைத்துள்ளார். அன்று முதல் கருக்காத்த நாயகியாக கர்ப்பரட்சாம்பிகை தாய் பலருக்கும் அருள் பாலித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews