இரண்டு ஆடி அமாவாசை வருகிறதே… எதை எடுப்பது? ஒரே குழப்பமா இருக்கா? அப்படின்னா இதைப் படிங்க…!

By Sankar Velu

Published:

கடல் சார்ந்த ஆலயங்களில் அதிவிசேஷமாக நடைபெறுவது தான் ஆடி அமாவாசை முதலில் நடைபெறுவது ராமேஸ்வரம். ஆடி முதல் நாளில் அதாவது நாளைய தினம் (17.07.2023) அங்கு ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் ஆடி 31ம் தேதி (16.8.2023)  தான் ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது.

முதல் மற்றும் கடைசி அமாவாசைகளிலும் நாம் கொண்டாடலாம். சிலருக்கு வாய்ப்பு எதுல இருக்குன்னு பார்த்து அதைக் கடைபிடிங்க. இந்த 2 அமாவாசைகளிலும் முடிந்த அளவு விரதம் இருக்கப் பாருங்க. இது நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கருத வேண்டும்.

Aadi amavasai
Aadi amavasai

நீங்கள் இருக்கும் இடத்தின் அருகில் புகழ் வாய்ந்த கோவில் எது என்று பார்த்து அங்கு கேட்டு ஆடி அமாவாசை எப்போது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த நாளில் நீங்கள் அமாவாசையைக் கொண்டாடுங்கள்.

ஆடி முதல் நாளே அமாவாசையில் துவங்குகிறது. இது அதிவிசேஷம். அதிலும் திங்கள்கிழமை தொடங்குகிறது. அன்று தாய், தந்தை இல்லாதவர்கள் தான் இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். தாயோ அல்லது தந்தையோ இல்லாதவர்களும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம்.

இது ஆண்களுக்கான நியதி. சுமங்கலிப் பெண்கள் என்றால் பட்டினி விரதம் இருக்கக்கூடாது. அவர்கள் தாய், தந்தையர்களுக்குப் படையல் வைத்து வழிபடலாம். அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று தர்ப்பணமாகக் கொடுக்கலாம்.

வீட்டில் திதி கொடுக்க விரும்புபவர்கள் எள்ளும் தண்ணீரும் இறைத்து கண்களில் தண்ணீரை ஒற்றி சூரியபகவானைப் பார்த்து முன்னோர்கள் எங்களை நல்லபடியாக வழிநடத்த வேண்டும். அதற்கு அருள்புரிவாயாக என்று வேண்டிக் கொள்ளுங்கள். எள்ளும், தண்ணீரும் இறைத்த பிறகு தான் கடவுளை வழிபட வேண்டும்.

Aadi Amavasai 3
Aadi Amavasai 3

ஆடி 1ம் தேதி காலை 6 மணி முதல் 12 மணிக்குள் தர்ப்பணம் செய்து விட வேண்டும். ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரமாகப் பார்த்து படையல் வைத்துக் கொள்ளலாம். முதலில் காகத்திற்கு சாதம் வைத்தபின் சாப்பிட வேண்டும். மாலையில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அன்றைய தினம் யாராவது 2 பேருக்காவது சாப்பாடு வாங்கிக் கொடுங்க.

எதுவுமே வழியில்லாதவர்கள் ஒரு கைப்பிடி பச்சரிசி குருணையாவது எறும்புப் புற்றில் போட்டு விடுங்கள். அதுவும் அன்னதானம் தான். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் முன்னோர்களின் அன்பும், அருளாசியும் நமக்குக் கிடைக்கும்.

தாய் தந்தையர்கள் தங்களது பிள்ளைகள் தங்களுக்காக சின்ன சின்ன காரியம் செய்வதை பெரிதும் விரும்புவர். அவர்களின் பரிபூரண ஆசி அப்போது தான் கிடைக்கும். வாழ்கிற காலத்தில் மட்டுமின்றி அதற்குப் பிறகும் அவர்களை நாம் நினைக்கும்பட்சத்தில் நமக்கு ஆசி வழங்கி நல்வழி காட்டுவார்கள் என்பதே இந்த அமாவாசையின் தாத்பரியம்.