கே. பாலச்சந்தரின் படங்கள் என்றாலே புரட்சிகரமான கதைகளாக தான் இருக்கும் என்பதும் 20, 30 ஆண்டுகளுக்கு பின்னர் வரவேண்டிய புரட்சி படங்களை அவர் அந்த காலத்திலேயே எடுத்திருப்பார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படம்தான் அபூர்வ ராகங்கள்.
1975ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகமானார். கமல்ஹாசன் அப்போது பிரபலமான நடிகராக இருந்த நிலையில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து அன்றே கமலை விட சிறப்பாக நடித்து பெயரை தட்டிச் சென்று இருப்பார் ரஜினிகாந்த்.
யதார்த்தத்தை மீறிய ஒரு வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த படம் அப்போதே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேஜர் சுந்தரராஜன், கமல்ஹாசன், ஸ்ரீவித்யா, ஜெயசுதா, நாகேஷ் என மொத்தமே ஐந்து கேரக்டர்கள் தான் முக்கிய பங்காக இந்த படத்தில் இருக்கும்.
48 ஆண்டுகள் ஆனபோதிலும் இந்த படத்தை இன்று பார்த்தாலும் ஒரு புதுமையையும் தாக்கத்தையும் உணரலாம். அந்த வகையில் பாலச்சந்தர் இந்த படத்தை இயக்கியிருப்பார்.
ஒரு அப்பாவும் மகனும் உள்ள ஒரு குடும்பம், அம்மாவும் மகளும் உள்ள இன்னொரு குடும்பம். இவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள் இப்படத்தின் கதை.
கே பாலசந்தரின் கண்டுபிடிப்பு.. பிஎச்டி டாக்டர் பட்டம்.. நடிகர் சார்லியின் அரியப்படாத தகவல்..!
மேஜர் சுந்தரராஜன் அப்பாவாகவும் கமல்ஹாசன் மகனாகவும் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் அப்பா மகன் ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை வர அப்பாவிடம் இருந்து கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கமல்ஹாசனுக்கு ஸ்ரீவித்யா ஆதரவு கொடுப்பார்.
ஸ்ரீவித்யா காணாமல் போன கணவனை நினைத்து வருந்தி ஒரு மகளுடன் இருக்கும் கேரக்டரில் நடித்திருப்பார். இந்த நிலையில் தான் கமலுக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் இடையே மெல்லிய காதல் துளிரும். அந்த காதலை கூட மிகவும் நயமாகவும் அழகாகவும் ’அதிசய ராகம் அபூர்வ ராகம்’ என்ற பாடலில் கண்ணதாசன் சொல்லி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் ஸ்ரீவித்யாக்கும் மகள் ஜெயசுதாவுக்கும் இடையே பிரச்சனை வர ஜெயசுதா வீட்டை விட்டு வெளியேறி மேஜர் சுந்தர்ராஜனிடம் சரண் அடைவார். அவருடைய கண்ணியமிக்க ஆண்மை, பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை ஆகியவை காரணமாக சுந்தர்ராஜன் மீது ஒரு ஈர்ப்பு வரும். அந்த ஈர்ப்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறும்.
இந்த நிலையில் இந்த சிக்கலான சூழ்நிலை இரு குடும்பத்திற்கும் தெரியவரும். அப்போது திடீர் திருப்பமாக ஸ்ரீவித்யாவின் காணாமல் போன கணவர் ரஜினிகாந்த் திரும்பி வருவார். அதன்பின் கிளைமாக்ஸ் என்ன என்பது தான் இந்த படத்தின் கதை.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு ஜமின்தாரின் மகனா? யாரும் அறியாத சில தகவல்கள்..!
இந்த படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதும், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது பி.எஸ்.லோக்நாத்துக்கும் , சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசிய திரைப்பட விருது வாணிஜெயராமுக்கும், சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது கமல்ஹாசனுக்கும், சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது கே.பலசந்தருக்கும் கிடைத்தது.