சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவுடன் அரசியல் ஆசை வந்து முதலமைச்சர் கனவுடன் அரசியலுக்கு வந்து ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் மண்ணை கவ்விய வரலாறு தான் தமிழக அரசியல் வரலாற்றில் உள்ளது.
எம்ஜிஆர்: திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் எம்ஜிஆர் ஒரு முக்கிய அரசியல்வாதியாக இருந்தார். இதையடுத்து அவர் அந்த கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
கே பாலசந்தரின் கண்டுபிடிப்பு.. பிஎச்டி டாக்டர் பட்டம்.. நடிகர் சார்லியின் அரியப்படாத தகவல்..!
எம்ஜிஆர் முழுக்க முழுக்க தனது ரசிகர்களை நம்பி கட்சியை தொடங்கவில்லை. அவர் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வந்த தலைவர்களை நம்பி தான் கட்சியை தொடங்கினார் என்பதும் அதனால்தான் அவர் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா: எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அதிமுக என்ற கட்சியை ஜெயலலிதா கட்டுக்கோப்பாக கொண்டு வந்தார். தமிழக அரசியலில் எம்ஜிஆர், ஜெயலலிதா தவிர வேறு யாரும் அரசியலில் முதலமைச்சர் கனவுடன் வந்து வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா தங்கள் ரசிகர்களை நம்பி சொந்தமாக கட்சியை நடத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவாஜி கணேசன்: எம்ஜிஆருக்கு இணையான நடிகர் என்ற பெயர் பெற்றவர். தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். அவரது நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர். இவர் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை 1988ஆம் ஆண்டு தொடங்கினார். அப்போது நடந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மனைவி ஜானகியின் கட்சியுடன் கூட்டணி வைத்தார். சிவாஜி கணேசன் உள்பட அவரது கட்சியினர் ஒருவர் கூட ஜெயிக்கவில்லை என்பதுதான் பரிதாபமானது.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு ஜமின்தாரின் மகனா? யாரும் அறியாத சில தகவல்கள்..!
கே பாக்யராஜ்: இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை மன்னன் என்ற பெயர் எடுத்த கே பாக்யராஜ், எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவரது கட்சியும் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெறவில்லை.
டி ராஜேந்தர்: கே பாக்யராஜுக்கு போட்டியாளராக கருதப்பட்ட டி ராஜேந்தர் தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அதன் பிறகு அந்த கட்சியை கலைத்துவிட்டு வேறு ஒரு பெயரில் கட்சியை ஆரம்பித்தார். ஆனாலும் அவராலும் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை.
விஜயகாந்த்: அரசியலில் ஓரளவுக்கு நிலைத்து நின்றார் என்றால் அது விஜயகாந்த் என்று சொல்லலாம். கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அவரது கட்சி தமிழகத்தில் ஓரளவு புகழ் பெற்றது. கிராமம் வரை அவரது கட்சிக்கு தொண்டர்கள் இருந்தார்கள். ஆனால் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக அவரது கட்சி இருக்கும் என்று மக்கள் நினைத்த நிலையில்தான் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தவறான முடிவு எடுத்தார். அதன் பிறகு அவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை குறைந்தது. இதையடுத்து விஜயகாந்த் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டதால் அரசியலில் தீவிர கவனம் செலுத்தவில்லை.
கமல்ஹாசன்: இவர் சினிமாவில் பல சாதனைகள் செய்தாலும் அரசியலில் அவராலும் ஜெயிக்க முடியவில்லை. மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து ஒரு பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒரு சட்டமன்றத் தேர்தலை சந்தித்து விட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் உள்பட அவரது கட்சியினர் அனைவருமே தோல்வி அடைந்தனர். இப்போதும் அவர் கட்சியை நடத்தி வந்தாலும் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணிக்குத் தான் செல்வார் என்பதும் அவருக்கும் முதலமைச்சர் வாய்ப்பு என்பது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் கார்த்திக்: தனது சமுதாய ரசிகர்களை நம்பி மனித உரிமை காக்கும் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் வேறு சில பெயர்களில் கட்சியை ஆரம்பித்தாலும் அவராலும் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
சரத்குமார்: ஹீரோ, வில்லன், குணச்சித்திர கேரக்டர்களில் நடித்த இவருக்கும் அரசியல் ஆசை வந்தது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை அவர் கடந்த பல வருடங்களாக நடத்தி வந்த போதிலும் அவரால் இன்னும் பெரிய அளவில் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறி கட்சி ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார். ஆனால் அதிமுக, திமுக என்ற இரண்டு மாபெரும் கட்சிகளுக்கு இணையாக தன்னால் வாக்குகளை பெற முடியாது என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவித்தார். இதனால் அவர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டாலும் அவர் அரசியலுக்கு வந்திருந்தாலும் அவரால் பெரிய அளவில் சாதித்திருக்க முடியாது என்று தான் கூறப்படுகிறது.
நடிப்பின் நாயகி, நாட்டிய பேரொளி பத்மினியின் அபூர்வ தகவல்கள்..
தமிழகத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தவிர வேறு எந்த நடிகர்களும் முதலமைச்சர் கனவில் வந்து வெற்றி பெறவில்லை என்பதுதான் வரலாறு. இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சியை ஆரம்பிக்க களமிறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. எம்ஜிஆரை அடுத்து விஜய் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.