திருஞானசம்பந்தரின் தேவாரமும், அருணகிரிநாதரின் திருப்புகழும் பாடப்பெற்ற தலம் திருவாடானை. இதன் சங்க காலப்பெயர் அட்டவாயில். இந்த ஊரில் அமையப்பெற்ற ஆடானை நாதர் கோவில் பற்றியும் அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பார்ப்போம்.
தலவரலாறு
வருணபகவானின் மகன் வாருணி. இவர் ஒரு காலத்தில் புஷ்பத்திரை என்ற நதிக்கரையில் தவம் செய்து கொண்டு இருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றுவிட்டார்.
அவரது அகம்பாவத்தைக் களைய எண்ணிய முனிவர் அவரை ஆட்டுத்தலையுடனும், யானை உடலுடனும் திரிந்து அவதிப்படச் செய்தார். இதனால் வாருணியின் உருவம் மாறியது. செய்வது அறியாது திகைத்தான். பெரியோரை அவமதிப்பது தவறு என்பதை உணர்ந்தான்.
பசிப்பிணியால் வருந்தி துர்வாசரிடமே அடைக்கலம் புகுந்து சாபவிமோசனம் பெற வேண்டினான். முனிவரும் மனம் இரங்கி 12 ஆண்டு காலம் சாபத்தை அனுபவிக்க வேண்டும். பின்னர் பாரிஜாதவனம் சென்று அங்குள்ள ஸ்ரீஆதிரெத்னேஸ்வரரை பூஜித்து வழிபட சாப விமோசனம் நீங்கும் என்றார்.
அதன்படி, வாருணி இத்தலம் வந்து வழிபட சாபவிமோசனம் பெற்றான். பழைய சுந்தர வடிவத்தைப் பெற்றான். இதனால் இத்தலத்திற்கு ஆடானை என்றும் ஆடானை நாதர் என்றும் பெயர் வந்தது.
திருவாடானையின் மையப்பகுதியில் ஆடானை நாதர் கோவில் உள்ளது. கிழக்கு நோக்கிய வாயிலுடன் சுமார் 130 அடி உயரம், 9 நிலைமாடங்கள் உள்ளன. கம்பீரமான ராஜகோபுரத்தில் 4 பக்கங்களிலும் நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய பதுமைகள், பூதகணங்கள், தேவர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். உள்பிரகாரத்தில் சுவாமி, அம்மனுக்குத் தனித்தனியாக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
சுவாமி சன்னிதியின் முன் ராஜகோபுரம் வரை இருசாரிமண்டபம் வெகு அழகாக அமைந்துள்ளது. இங்கு திருக்கல்யாணம், கைலாசக்காட்சி, கச்சேரிகள் மற்றும் பிரசங்கங்கள் நடைபெறும்.
தல விருட்சமாக பாரிஜாதம், வன்னி, குறுகத்தி, வில்வம் ஆகியவை உள்ளன.
சூரியன், வாருணி, வருணன், வசிஷ்டர், அகத்தியர், ஹரிச்சந்திரன், மது, அர்ச்சுனன் போன்றோர் இங்கு வழிபட்டுள்ளனர்.
இத்தலத்திற்கு பாரிஜாதவனம், வன்னிவனம், குறுகத்திவனம், வில்வ வனம், முத்திபுரம், ஆதிரத நேச்சுரம், ஆடானை, மார்க்கண்டேயபுரம், அகத்தீஸ்வரம், பதுமபுரம், கோமுத்தீச்சுரம், விஜயேச்சுரம் என்று பல்வேறு பெயர்கள் உண்டு.
அமைப்பு
சுவாமி கோவில் முன்பு வடக்கே பாலசுப்பிரமணியரும், தெற்கே விநாயகரும் காட்சி தருகின்றனர். தென்பக்க அணி ஒட்டி மண்டபத்தில் சுவாமி அம்மன் அலங்கார மண்டபமும், வடக்கே உள்ள மண்டபத்தில் யாகசாலையும் அமைந்துள்ளன. சன்னிதிக்கு எதிரில் தவஜ ஸ்தம்பமும், நந்தி பலி பீடங்களும் உள்ளன.
சூரியபகவான் மற்றும் உபயதேவிமார்கள், கேஜஸ்சண்டர் சூரிய சண்டிகேஸ்வரர், சமக்குரவர், அறுபத்து மூவர், சப்த கன்னிகைகள், கணேசர், சோமஸ்கந்தர், சந்திரசேகரர், காசி விசுவநாதர் மற்றும் உபயநாச்சியார், மகாவிஷ்ணு, வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர் ஆகியோர் தத்தம் இடங்களில் காட்சி தருவது அழகிலும் அழகு.
மகாலெட்சுமிக்குத் தனிச்சன்னிதி உள்ளது. நடராஜர், பதஞ்சலி, வியாக்ரபாதர், தும்புரு நாரதர், பிரம்மா, விஷ்ணு, காரைக்கால் அம்மையார், ஒளவையார் ஆகியோரும் இங்கு தனிச்சன்னிதி கொண்டுள்ளனர்.
அமைவிடம்
மதுரையில் இருந்து 100 கிலோ மீட்டர், தேவகோட்டையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ராமநாதபுரத்திற்கு வடக்கே 53 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.