ஆக்ரோஷமான நரசிம்மரின் உக்கிரத்தையே தணித்த சரபேஸ்வரர்…! கஷ்டங்களில் இருந்து விலக வழிபடுங்க..!

By Sankar Velu

Published:

கோபம் என்பது பொங்கி அது ஆங்கார ரூபமாக மாறும்போது அவர்களை அடக்குவது என்பது குதிரைக் கொம்பான விஷயம். ஆத்திரம் அறிவை மட்கிப் போகச் செய்யும். எதிரே இருப்பவர் நல்லவரா, கெட்டவரா என்று கூட பார்க்காது.

என்ன செய்கிறோம் என்று கூட தெரியாது. அந்த நேரத்தில் அந்தக் கணப்பொழுதில் தான் நடக்கக்கூடாதது எல்லாம் நடந்து நம் வாழ்க்கையையே சோகமயமாக்கி விடுகிறது. அதனால் தான் பொறுமை, நிதானம் என்று பெரியவர்கள் நமக்கு முன்னரே சொல்லித் தந்து இருக்கிறார்கள்.

நமக்கு மட்டும் தான் இந்த ஆங்காரம் வருகிறதா என்றால் நிச்சயமாக இல்லை. கடவுளுக்கேக் கூட வந்து இருக்கிறது. அவர் யார்? எப்படி இவ்ளோ கோபம் வந்தது? அதை அடக்கியது யார் என்பது பற்றிப் பார்ப்போம்.

Sarabeshwarar
Sarabeshwarar

சரபேஸ்வர வழிபாடு செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. அது மகத்தானது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள். சரபேஸ்வரரை தரிசிப்போம். சங்கடங்கள் விலகி சந்தோஷத்தைப் பெறுவோம்.

இரண்யனின் இறுமாப்பு

நரசிம்மர் உக்கிரமூர்த்தியாகத் திகழ்ந்தார். அப்படியொரு உக்கிரம் ஏன்? இரண்யன் ஆணவத்துடன் இருந்தான். பிரகலாதனை இழிவாக நடத்தினான். தன்னை எவராலும் வெல்ல முடியாது என்ற இறுமாப்பில் இருந்தான். தனக்கு நிகர் எவருமில்லை என்ற மமதையில் இருந்தான். தானே கடவுள் என்ற ஆணவத்துடன் அட்டூழியங்கள் செய்து வந்தான்.

அப்போது இஷ்டத்துக்கு நிபந்தனைகளுடன் வரங்களைப் பெற்றிருந்தான். எனக்கு மரணம் நேரக்கூடாது. ஒருவேளை மரணம் வந்தால், அது பகலாகவும் இரவாகவும் இல்லாத நேரத்தில் நடக்க வேண்டும் என்றெல்லாம் இஷ்டத்துக்கு வரங்களைக் கேட்டுப் பெற்றிருந்தான்.

அதன் பின்னர் இரண்யனை வதம் செய்யும் தருணம் வந்தது. பக்த பிரகலாதன், மகாவிஷ்ணுவை அழைத்தான். நாராயணா எனும் பிரகலாதனின் குரலுக்கு ஓடோடி வந்தார் மகாவிஷ்ணு. இந்தமுறை அவர் எடுத்ததுதான் பத்து அவதாரங்களில் ஒன்றாயிற்று. அந்த அவதாரம்… ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அவதாரம்.

கடும் உக்கிரத்துடன் வந்தார். தூணில் இருந்து பிளந்துகொண்டு வந்தார். இரண்யனை அழித்து ஒழித்தார்.

இரண்யனை சம்ஹாரம் செய்த பிறகும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. கோபம் குறையவில்லை. ஆவேசம் அமைதிய அடையவில்லை. தேவர்களும் முனிவர்களும் கலங்கிப் போனார்கள். வைகுண்டமே என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் தவித்தது.

எல்லோரும் சிவபெருமானிடம் சென்றார்கள். முறையிட்டார்கள். சிவபெருமானும் தட்சனின் யாகத்தில் தோன்றச் செய்த வீரபத்திரரை அழைத்து, நரசிம்மரின் கோபத்தைத் தணிக்கும்படி பணித்தார்.

வீரபத்திரர் செய்த சாகசம்

வீரபத்திரர் நரசிம்மரை நெருங்கினார். ஆனால் நரசிம்மரை நெருங்கக்கூட முடியவில்லை. அதேசமயம், அவரின் உக்கிரம் இன்னும் கூடிக்கொண்டே போனது. தவித்துப் போனார் வீரபத்திரர். சிவனாரை நினைத்து தவம் மேற்கொண்டார்.

சிவபெருமான் அவருக்கு திருக்காட்சி தந்தருளினார். ‘என்னால் நரசிம்மரின் சினம் தணிக்க முடியவில்லை’ என வருந்தினான். மன்னிப்புக் கேட்டான்.

அப்போது, வீரபத்திரரின் மீது கோடி சூரியப் பிரகாசத்துடன் ஜோதிப் பிழம்பானது. இரண்டறத் தழுவியது. உருவமே மாறியது. யாளி எனும் மிருக முகத்துடன் காட்சி தந்தது. கழுத்து முதல் இடுப்பு வரை மனித உடல் தரித்திருந்தது.

சிம்மம் போன்ற கால்களும் வாலும் இருந்தன. கடும் உஷ்ணத்துடன் இருந்த அந்த வினோத உருவம் சரபேஸ்வரர் என அழைக்கப்பட்டது. நரசிம்மரை சரபேஸ்வரர் அடக்கினார். உக்கிரம் தணித்தார். ஆவேசத்தில் இருந்து அமைதிக்கு மாறினார். ஆக்ரோஷத்தில் இருந்து சாந்தரூபமாகத் தோன்றினார்.

சரபேஸ்வர வழிபாடு

அன்று முதல் சரபேஸ்வர வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்கிறது புராணம்.

நரசிம்மர் வழிபாடு எத்தனை வலிமை மிக்கதோ அதேபோல் சரபேஸ்வர வழிபாடும் வலிமையானது. எதிர்ப்புகளை எல்லாம் அழித்து அருளக்கூடியது. இன்னல்களை எல்லாம் போக்கித் தந்து அருளக்கூடியது. பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் முடிவைத் தந்து கைதூக்கிவிடுவார் சரபேஸ்வரர் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

Kurungaleeshwarar koil
Kurungaleeshwarar koil

தமிழகத்தில் சரபேஸ்வரருக்கு கோயிலும் குறைவு. கோயிலில் சந்நிதிகள் அமைந்திருப்பதும் அரிது. கும்பகோணம் அருகே திருப்புவனம் தலத்தில் சரபேஸ்வர் பிரமாண்ட ரூபத்தில் காட்சி தருகிறார். சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் சரபேஸ்வரருக்கு சந்நிதி அமைந்திருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் அமைந்துள்ள மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் சரபேஸ்வர மூர்த்தி சந்நிதி கொண்டிருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வர வழிபாடு செய்வது மகத்தானது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள். சரபேஸ்வரரை தரிசிப்போம். சங்கடங்கள் விலகி சந்தோஷத்தைப் பெறுவோம்..!