கமலின் அசுரத்தனமான வில்லன் நடிப்பு பிரபாஸ் படத்தில் கைகொடுக்குமா? பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடிக்க இப்படி ஒரு உத்தியா?!

By Sankar Velu

Published:

உலகநாயகன் கமல் ஒரு படத்தில் நடித்தால் அந்தப் படம் உலகளவில் விவாதிக்கும் பொருளாகி விடும். அந்தப் படத்தின் நிறை குறைகளைப் பற்றி அலச ஆரம்பித்து விடுவார்கள். அவர் ஒரு படத்தில் வந்து போனோலே அதாவது கெஸ்ட் ரோலில் தலையைக் காட்டினாலே அதையே படத்தின் விளம்பரமாக்கி வசூல் வேட்டை நடத்தி விடுவார்கள்.

பொதுவாக தமிழ்த்திரை உலக ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நாயகன் என்றால் அவர் எந்த ரோலில் நடித்தாலும் எப்படிப்பட்ட நடிப்பைக் கொடுத்தாலும் அவரைக் கொண்டாட ஆரம்பித்துவிடுவர். தொடர்ந்து அவருக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள். அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு தற்போதைய காலகட்டத்தில் கமல், ரஜினி, விஜய், அஜீத் ஆகியோரைச் சொல்லலாம்.

1 Project K
1 Project K

உலகநாயகன் பல படங்களில் நெகடிவ் ரோலில் நடித்து அசத்தியுள்ளார். அவை எல்லாமே சூப்பர்ஹிட் படங்கள் தான். குறிப்பாக சிகப்பு ரோஜாக்கள், இந்திரன் சந்திரன், ஆளவந்தான், தசாவதாரம் ஆகிய படங்களைச் சொல்லலாம். இந்தப் படங்களில் கமலின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஏன்னா இந்தப் படங்களில் எல்லாம் கதாநாயகனும் கமல் தான்.

ஆனால் முதன் முறையாக கமல் வேறொரு நடிகர் படத்தில் வில்லனாக அவதாரம் எடுக்கப் போகிறார். அப்படின்னா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். அதிலும் இந்தப் படத்தில் 20 நாள்களே நடித்ததற்காக கமலுக்கு 150 கோடி சம்பளமாம். அடேங்கப்பா என்று மூக்கில் விரலை வைக்கத் தோன்றுகிறது அல்லவா?

இந்தப் படம் மட்டும் வரட்டும். இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கும் உங்களுக்கு. ஏன்னா ஒரு பிரபல நடிகர் வில்லனாக நடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்தப் படத்தில் அவருக்கான கேரக்டர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பொறுத்தே அவரும் நடிக்க சம்மதித்திருப்பார்.

Project K
Project K

அந்தக் கேரக்டர் கதாநாயகனுக்கு சற்றும் சளைக்காதவராக அழுத்தமான கேரக்டராகவே இருக்க வேண்டும். சமீபத்தில் பாக்ஸ் ஆபீஸ்சில் வெளுத்து வாங்கியது கமலின் விக்ரம் படம். இதில் வில்லனாக நடித்தவர் விஜய் சேதுபதி. கமலுக்கு ஈடாக நடிப்பில் வெளுத்துக் கட்டி வில்லனுக்குரிய நற்பெயரை சம்பாதித்துக் கொண்டார். படமும் வசூலில் கொடிகட்டிப் பறந்தது.

அந்தவகையில் ப்ராஜக்ட் கே. படமும் இடம் பிடிக்கும். இந்தப் படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் தான் ஹீரோ. படத்தில் அமிதாப்பச்சனும் நடித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவும். பாக்ஸ் ஆபீஸ்சில் ஹிட் அடிக்கும். கலைஞானி கமலுக்கு இந்தப் படம் ஒரு சவாலாக இருக்கும். தனது புதிய பரிமாணத்தை இதில் அவர் ரசனை சிறிதும் குறையாத அளவில் வெளிப்படுத்தி அசத்துவார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும், உத்வேகத்தையும், ஆர்வத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.

Aalavanthan
Aalavanthan

அதே நேரம் என்னதான் இருந்தாலும் ஒரு படத்தின் வெற்றி பல காரணிகளைப் பொறுத்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக ஆளவந்தான் படத்தின் போஸ்டர்கள் மற்றும் செய்திகளைப் பார்த்ததும் நமக்கு படம் பட்டையைக் கிளப்பும் என்றே எண்ணத் தோன்றியது. ஆனால் படம் படுதோல்வி அடைந்தது. அதே போல ஒரு படத்தின் வெற்றி, தோல்விக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

பார்வையாளர்களின் விருப்பத்தேர்வுகள், பிற வெளியீடுகளின் போட்டி, விமர்சன வரவேற்பு மற்றும் வெளிப்புற காரணிகள் என அனைத்தும் சேர்ந்து தான் ஒரு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை நிர்ணயிக்கின்றன. இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டும் என்றால் படத்தின் கதை மற்றும் செயலாக்கம் அதன் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்த வரை கமல்ஹாசனின் இருப்பு அதன் வெற்றியில் முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.