பெற்றோர்களே குழந்தையை அடித்து வளர்க்கும் முறை சரியானதா???

By Sowmiya

Published:

குழந்தையை ஒழுக்கம் உடையவர்களாக வளர்ப்பது தாய் தந்தையரின் பொறுப்பு. குழந்தை வளர வளர தாய் தந்தையரின் பொறுமைக்கு நிறைய சோதனைகள் வைப்பார்கள். சில சமயங்களில் பிடிவாதம் குணமுடையவர்களாக சில சமயங்களில் அதீத குறும்பு செய்பவர்களாக சில நேரங்களில் தான் செய்த தவறு மறைக்க பொய் கூறுபவர்களாக அல்லது பிறருடைய பொருள் தனக்கு வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் எடுப்பவர்களாக இப்படி அவர்கள் குழந்தை பருவத்தின் ஆரம்ப காலத்தில் ஏதாவது சில தவறுகள் செய்ய நேரிடலாம். அப்படி தவறு செய்யும் குழந்தையை திருத்துவது பெற்றோரின் தலையாய கடமை. ஆனால் அதை எப்படி திருத்துகிறோம் என்பதுதான் மிக மிக முக்கியம். பெற்றோர் கண்டிக்கும் விதம் குழந்தைகளின் குற்றத்தை திருத்தும் வகையில் இருக்க வேண்டுமே தவிர  அவர்களை மேலும் குற்றவாளி ஆக்கி விடக் கூடாது. என்ன குற்றவாளிகளா? ஆம் அடித்து வளர்க்கும் குழந்தைகள் பின்னாலே தவறான முன்னுதாரணத்திற்கு ஆளாகிறார்கள். அடித்தல், வன்முறை போன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

spanking

குழந்தைகளுக்கு அன்பை காட்டுகிறோம் என்ற பெயரில் அதீத செல்லம் கொடுப்பது எவ்வளவு தவறோ அதைவிட தவறானது கண்டிக்கிறோம் என்ற பெயரில் குழந்தைகளை அடிப்பது.

பல பெற்றோர்கள் நல்ல மனநிலையில் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது குழந்தை ஏதேனும் குறும்பு செய்தால் அதை ரசித்து மகிழ்வர் அலைபேசியில் புகைப்படம் எடுத்து நண்பர்களுடன் பகிர்ந்து அந்த குழந்தையின் குறும்பை கொண்டாடுவர். ஆனால் ஏதேனும் கோபத்திலோ அல்லது கவலையிலோ இருக்கும்பொழுது குழந்தை செய்யும் மிகச் சிறிய தவறுக்கு கூட அதிக அளவு கோபப்பட்டு அவர்களை அடிக்க தொடங்கி விடுவார்கள் ஆக தண்டனை கொடுப்பது என்பது குழந்தையின் சேட்டையை பொறுத்தது அல்ல பெற்றோரின் மனநிலையைப் பொறுத்தே பல நேரங்களில் நிகழ்கிறது.

அடித்து வளர்க்கும் குழந்தைகளிடம் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்:

1. பிறரை அடித்தல்:

குழந்தை தன்னைச் சுற்றி இருப்போரின் அணுகுமுறைகளையே முன்மாதிரியாக கொண்டு அவர்களும் நடக்க தொடங்குவார்கள். குழந்தைகளை அடிக்கும் பொழுது குழந்தைகள் மனதிலும் தன்னைவிட சிறியவர்களை அடிக்கலாம் என்று எண்ணம் வலுப்பெறும். நீங்கள் ஒரு கம்பை கொண்டு உங்கள் குழந்தையை அடிக்கிறீர்கள் என்றால் அவர்களுக்கு நீங்களே பிறரை அடி என்று உரிமம் கொடுத்தது போல் ஆகிவிடும்.

2. தன்னை பற்றிய தவறான மனப்பான்மை:

istockphoto 1136756030 612x612 1

உடலளவில் ஏற்படும் காயங்களை விட மனதளவில் உண்டாகும் காயங்கள் நீண்ட காலத்திற்கு வடுவாக தங்கிவிடும். அவர்களின் மீது அவர்களுக்கு மரியாதை குறைவு ஏற்படும். தோல்வி மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள்.

3. அதிக கோபம் உடையவர்களாக மாறுவார்கள்:

கோபம் அதிகமாகி குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு தெரியாமல் அந்த கோபம் எனும் குணத்தை குழந்தைகளுக்கு விதைக்கிறார்கள். குழந்தைகள் வளரும் பொழுது அந்த குணமும் கூடவே வளர்ந்து அவர்களை கோபக்காரர்களாக மாற்றி விடுகிறது.

4. மோசமான நினைவாக இருத்தல்:

பலரும் தங்கள் இளமைக்காலத்தில் நிகழ்ந்த மகிழ்ச்சியான நினைவுகளை மீட்டெடுத்து பார்க்க விரும்புவது இயல்பு. ஆனால்  இப்படி அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு தாங்கள் வாங்கிய அடிகள் மட்டுமே வடுவாக மனதில் பதிந்து இருக்கும் தவறான நினைவுகள் மட்டுமே அவர்களுக்கு நிறைந்திருக்கும் நேர்மறை நினைவுகள் இல்லாது இருப்பர்.

istockphoto 1396094306 612x612 1

பாதிப்பு குழந்தைகளுக்கு மட்டும்தானா என்று கேட்டால்.. இல்லை.. பெற்றோர்களுக்கும் நிறைய பாதிப்புகள் உண்டாகிறது. ஒரு சிறிய தவறுக்காக அப்போதைய சூழலில் கடுமையாக தாக்கும் பல பெற்றோர்கள் சில காலத்திற்குப் பின் இதற்குப் போயா அடித்தோம் என்று வருந்துவதும் உண்டு. கோபத்தில் அடிக்கும் பொழுது பெற்றோர்கள் கண் போன்ற மென்மையான உறுப்புகளில் அடித்து விட்டால் அது குழந்தையின் எதிர்காலத்தையே பாதிக்க கூடிய வாய்ப்பு உண்டு எனவே பெற்றோர்கள் குற்ற உணர்வுடனே இருந்திட நேரிடும். சரியாக வழி நடத்தி வளர்த்தால் பெற்றோரின் கண் அசைவிற்கே குழந்தைகள் மரியாதை செய்வர் அடித்து தான் திருத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.