80ஸ் கிட்ஸ்களுக்கு உற்சாகம் தரும் வருடம் இது. தமிழ்த்திரையுலகில் இது ஒரு பொன்னான வருடம். ரசிகர்களின் ரசனைக்கு இது செம விருந்து. இது ஒரு பல்சுவை ஆண்டு. எப்படி என்றால் ரஜினி, கமல் அப்போது உச்ச நடிகர்களாக இருந்த போதும் கார்த்திக், பார்த்திபன், பாக்யராஜ், ராமராஜன் ஆகியோரது படங்களும் அவர்களுக்குப் போட்டியாக களத்தில் மோதி இணையான வெற்றியையும் பெற்றது. அது எந்தெந்தப் படங்கள் என்று பார்ப்போம்.
இந்த ஆண்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை என 3 படங்கள் வந்தன. அதே போல் உலகநாயகன் கமலுக்கு அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா என இரு பெரும் சூப்பர்ஹிட் படங்கள் வந்து பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டன. இந்தப் படங்களைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை என்பதால் மீதமுள்ள படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
வருஷம் 16
பாசில் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான சூப்பர்ஹிட் படம். கார்த்திக், குஷ்பூ, சார்லி, வி.கே.ராமசாமி, சுகுமாரி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் அனைத்தும் நெஞ்சில் நிற்கும் ரகங்கள்.
கங்கைக் கரை மன்னனடி, ஏ அய்யாசாமி, கரையாத மனமும், பழமுதிர்ச் சோலை, பூ பூக்கும் மாசம் ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப் படத்தில் நடித்ததற்காக நவரச நாயகன் கார்த்திக்கிற்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
புதிய பாதை
பார்த்திபன் நடித்து இயக்கிய படம். ஜோடியாக சீதா நடித்துள்ளார். வி.கே.ராமசாமி, மனோரமா, நாசர், ஸ்ரீதர், குயிலி, வெண்ணிற ஆடை மூர்த்தி, இடிச்சபுளி செல்வராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்திரபோஸின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.
கரகாட்டக்காரன்
மக்கள் நாயகன் ராமராஜனுக்கு இது ஒரு பெரிய மைல்கல். அதுவரை சிறு சிறு வெற்றியையே ருசித்து வந்த ராமராஜனுக்கு இது அதிரிபுதிரி வெற்றி. கனகாவின் அருமையான நடிப்பு படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.
அது மட்டுமல்லாமல் படத்தில் கவுண்டமணி, செந்தில் ஜோடியின் நகைச்சுவை சூப்பரோ சூப்பர். அது மட்டுமல்லாமல் படத்தில் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் அருமை. கங்கை அமரனின் இயக்கத்தில் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
இந்த மான் உந்தன், குடகுமலைக் காற்றில், மாங்குயிலே பூங்குயிலே, மாரியம்மா மாரியம்மா, முந்தி முந்தி விநாயகரே, நந்தவனத்தில் ஒரு, ஊருவிட்டு ஊருவந்து, பாட்டாலே புத்தி சொன்னான் ஆகிய பாடல்கள் உள்ளன.
புதுப்புது அர்த்தங்கள்
கே.பாலசந்தரின் இயக்கத்தில் ரகுமானின் நடிப்பில் புதிய பரிமாணத்தில் வெளியான இந்தப் படத்தை அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசித்தனர். படத்தின் கதை தான் அதன் வெற்றிக்குப் பிளஸ் பாயிண்ட். கீதா, சௌகார் ஜானகி, ஜெயசித்ரா, ஜனகராஜ், சித்தாரா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர். எடுத்து நான் விடவா, எல்லோரும் மாவாட்ட, குருவாயூரப்பா, கல்யாண மாலை, கேளடி கண்மணி உள்பட பல பாடல்கள் உள்ளன.
ஆராரோ ஆரிரரோ
கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய சூப்பர்ஹிட் படம். இன்னொரு விசேஷமும் இந்தப் படத்தில் உண்டு. இந்தப் படத்திற்கு இசை அமைத்தவரும் கே.பாக்யராஜ் தான். ஜோடியாக நடித்தவர் பானுப்ரியா.
ஜெய்கணேஷ், மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். எல்லாருமே லூசுங்க தான், என் கண்ணுக்கொரு நிலவா, தானா தலையாடுதுன்டா ஆகிய பாடல்கள் அருமை.