பாலூட்டுதல் என்பது ஒரு அழகிய பயணம் ஆகும். குழந்தை பிறந்ததிலிருந்து குறிப்பிட்ட வயது பாலூட்டும் காலம் வரை ஒவ்வொரு தாய்மாரும் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். அந்த சவால்களில் ஒன்றுதான் பால் கட்டுதல்.
இந்தப் பால் கட்டுதல் அனைத்து பாலூட்டும் தாய்மார்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் ஏற்படுவது இயல்பு . ஆரம்பத்திலேயே சரி செய்யா விட்டால் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம்.
பால் கட்டுதல் என்றால் என்ன?
பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பகப் பகுதியில் பால் வெளியேறாமல் கட்டி விடும். இந்த பால் கட்டுதல் மிகக் கடுமையான வலியினை ஏற்படுத்தும். வீங்கி கன்னிப்போனது போல் இருக்கும். சிலருக்கு காய்ச்சல் ஏற்பட ஆரம்பிக்கும்.
பால் கட்டுதல் ஏற்பட காரணம் என்ன?
பால் கட்டுதல் பெரும்பாலும் குழந்தை பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்களில் சிலருக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. காரணம் குழந்தை பிறப்பிற்குப் பின்பு அதிக அளவு பால் சுரக்கும் ஆனால் குழந்தையின் சிறிய வயிறு குறைந்த அளவிலான பாலையே எடுத்துக் கொள்ளும். அதிக அளவிலான பால் சுரப்பு ஏற்படுவதால் பால் கட்டுவதற்கு வாய்ப்பு உண்டு.
பால் கொடுக்கும் தாய்மார்கள் தளர்வான ஆடைகள் அணியாமல் இறுக்கமான ஆடைகளை அணியும் பொழுதும் பால் கட்டுதல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
குழந்தைக்கும் தாய்க்கும் காய்ச்சல் ஏற்படும்பொழுது பால் கட்ட வாய்ப்பிருக்கிறது.
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் சரியான இடைவெளியில் பாலை வெளியேற்றாவிட்டாலும் பால் கட்டுதல் நிகழலாம்.
பால் கட்டுதல் ஏற்படுத்தும் விளைவுகள்:
பால் கட்டுதல் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வலி ஏற்படுத்தும்.
காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு.
கட்டிக் குறையாமல் நீடித்தால் சீழ் வைக்க தொடங்கி விடும். இதனை மருத்துவர் ஸ்கேன் செய்து ஊசி மூலம் மட்டுமே வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
பால் கட்டுதலை சரி செய்வது எப்படி?
பால் கட்டுவதை சரி செய்ய வீட்டு வைத்தியங்களே போதுமானது. ஆனால் நிலைமை நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
1. வெந்நீர் ஒத்தடம் :
மருத்துவர்களாலும் அனுபவசாலிகளாலும் கூறப்படும் முதல் வைத்தியம் வெந்நீர். பால் கட்டி உள்ள இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது. தாங்கிக்கொள்ள கூடிய அளவு சூட்டில் வெந்நீரால் ஒத்தடம் கொடுக்கும் பொழுது பால் கட்டுதல் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கட்டிய பால் வெளியேற தொடங்கிவிடும்.
2. பூண்டு:
பால் கட்டுதல் பிரச்சனை ஏற்பட்டவர்கள் பூண்டு சாப்பிட கொஞ்சம் கொஞ்சமா கட்டி குறைய தொடங்கி விடும். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பூண்டு 2 பல் சாப்பிடவும். வெறும் பச்சை பூண்டை சாப்பிட பிடிக்காதவர்கள் அந்தப் பூண்டுடன் தேன் குழைத்தும் சாப்பிடலாம்.
3.உருளைக்கிழங்கு அல்லது முட்டைக்கோஸ் இலை:
உருளைக்கிழங்கினை வட்ட வடிவில் நறுக்கி பால் கட்டி உள்ள இடத்தில் வைத்து கட்ட வேண்டும் அவ்வபோது உருளைக்கிழங்கை மாற்றிக் கொள்ளலாம் நீண்ட நேரம் இதுபோல் உருளைக்கிழங்கை கட்டி வைத்திருக்க பால் வெளியேற தொடங்கும். முட்டைக்கோஸ் இலைகளையும் இதுபோல் கட்டலாம்.
4. மசாஜ்:
தாங்களே மசாஜ் செய்து கட்டி உள்ள இடத்திலிருந்து பாலை வெளியேற்றுதல். தேங்காய் எண்ணெய் கொண்டும் மசாஜ் செய்யலாம்.
5. ஐஸ் ஒத்தடம்:
ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுத்தும் கட்டியை குறைக்கலாம். ஆனால் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த முறையினை மருத்துவர் ஆலோசனையின்றி கையாள வேண்டாம்.
பிரசவத்தின் போது ஏற்படும் வலியை கூட தாங்கி விட்டேன் ஆனால் இந்த பால் கட்டுதல் தரும் வேதனையை தாங்க முடியவில்லை என்று பலர் புலம்புவது உண்டு. பால் கட்டுதல் ஏற்பட்டு விட்டால் உடனடியாக பதட்டம் அடையாமல் எந்த முறையை கையாண்டு குறைக்கலாம் என்று நிதானமாக செயல்படுங்கள்.