திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் சிவன். அக்னிமயமானவன். கார்த்திகை தீபம், கிரிவலம் என பல அற்புதமான நினைவுகள் நமக்கு வந்துவிடும். அந்த வகையில் இப்போது இந்த அருமையான திருத்தலத்தைப் பற்றிய முக்கிய குறிப்புகளைப் பார்க்கலாம்.
தென்னிந்தியாவில் உள்ள சிவாலயங்களில் மிக முக்கியமான தலம் திருவண்ணாமலை. மிகவும் அழகாக திட்டமிட்டுக் கட்டப்பட்டது. கோவிலில் உயர்ந்த மதிற் சுவர்கள், வானளாவிய கோபுரங்கள் நான்கு பக்கமும் நிமிர்ந்து நின்று பார்ப்பதற்கு பிரமிப்பூட்டுகின்றன.
கிழக்கில் பெரிய கோபுரமும், தெற்கில் திருமஞ்சன கோபுரமும், மேற்கில் பேய் கோபுரமும், வடக்கில் சென்னம்மாள் கோபுரமும் உள்ளது.
பெரிய கோவில்
மிகப்பெரிய கோவில்களில் ஒன்று இந்த சிவாலயம். கோவிலின் பரப்பு 44 ஏக்கர். தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் பிரசித்திப் பெற்றது. இதன் சுற்றளவு 8 மைல்கள். இதன் உயரம் 2668 அடிகள்.
முதல் பிரகாரத்தில் நீராட சிவகங்கை உள்ளது. 2ம் பிரகாரத்தில் நீராட பிரம்ம தீர்த்தம் உள்ளது.
தேயு தலம்
திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் இங்கு வெகுவிமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் மலை உச்சியில் மகாதீபம் பிரம்மாண்டமான கொப்பரையில் நெய் ஊற்றி இந்த மகாதீபம் ஏற்றப்படுகிறது. இது ஒரு தேயு தலம்.
இறைவன் அக்னிமயமானவன் என்பதே பக்தர்களின் ஐதீகம். இது பஞ்ச பூத தலங்களில் ஒன்று. கோவிலில் உள்ள சுவாமியின் பெயர் அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார். அம்பாளின் பெயர் அபித குஜலாம்பாள், உண்ணாமுலை.
கார்த்திகை மாதம் நடக்கும் பிரமோற்சவத்தின் போது வெள்ளி ரிஷபம், வெள்ளித் தேர், காமதேனு, கற்பக விருட்சகம் போன்ற வாகனங்களில் சுவாமியும், அம்மனும் உலா வருவர்.
அருணகிரிநாதர்
இந்தக் கோவிலில் 106 கல்லெட்டுகள் உள்ளன. திருவண்ணாமலையில் தான் அருணகிரிநாதர் பிறந்துள்ளார். அவரது திருவுருவம் மலையில் பொறிக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தனி சந்நிதி உள்ளது.
மலையின் அடிவாரத்தில், நடுப்பகுதியில் குகைகள், ஆசிரமங்கள், தீர்த்தங்கள் உள்ளன. மலையைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் ஏராளமான லிங்கங்களும், நந்திகளும் உள்ளன. பரத சாஸ்திரத்தில் உள்ள தாண்டவ லட்சணம் என்ற நாட்டிய நிலைகள் 108ஐயும் விளக்கும் சிற்ப வடிவங்கள் கோபுர வாசலில் உள்ளன.
ரமண மகரிஷி தவம்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட விக்கிரகங்கள், பல நந்தவனங்கள் உள்ளன. துவார பாலகர், யாளி உருவங்கள், 1008 கால் மண்டபமும், மிகப் பழமையான கர்ப்பக்கிரகம், கம்பத்தடி, ரமண மகரிஷி தங்கி தவம் செய்த பாதாள லிங்கேஷ்வரர் சன்னிதியும் காண வேண்டிய இடங்கள்.
கிரிவலம்
இங்கு கிரிவலம் வருவது மிகச்சிறப்பு. 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலத்தின் பாதையில் ஏராளமான லிங்கங்களும், சித்தர் சன்னதிகளும் உள்ளன. பாதயாத்திரையாக கிரிவலம் வரும் பக்தர்கள் அனைவரும் இதைக் கண்டுகளிக்கத் தவற மாட்டார்கள்.