வெளிநாட்டுகளில் வேலை செய்ய ஆசையா? அப்போ இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கு தான்!

By Velmurugan

Published:

சென்னை பாஸ்போர்ட் மோசடி வழக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த முக்கிய தரகரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்தான் சென்னை கும்பலுக்கு போலி பாஸ்போர்ட் தயாரிப்பது எப்படி என பயிற்சி அளித்து இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குனரகம் சார்பாக கடந்த 19ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு பாஸ்போர்ட் பிரிவில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் முகமது ஷேக் இலியாஸ் என்பவர் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்திருப்பதாகவும், அதற்கு தேவையான உபகரணங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தன.

அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டன. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயார் செய்யும் ஏஜென்ட்களான திருவொற்றியூரை சேர்ந்த சிவக்குமார் மற்றும் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது புகாரி ஆகியோரை கடந்த 30ஆம் தேதி கைது செய்தனர்.

விசாரணையில் முஹம்மது புகாரியிடம் இருந்து பாஸ்போர்ட்டுகள், பாஸ்போர்ட் தாள்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாடுகளின் போலியான ரப்பர் ஸ்டாம்புகள் அதை தயாரிக்கும் உபகரணங்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்டாம்ப் அடிக்கும் இயந்திரம், செல்போன்கள் என மொத்தம் 160 க்கும் மேற்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பாஸ்போர்ட் வாங்கி தரும் ஏஜென்ட்களிடம் பழைய பாஸ்போர்ட்டுகள் மற்றும் விசா பேப்பர்களை வாங்கி அதன் உள் பக்கங்களை பிரித்து எடுத்து தகுதியில்லாத இந்திய மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு போலியாக பாஸ்போர்ட்டுகள் மற்றும் விசா ஸ்டாம்பிங் செய்து கொடுத்து பணம் பெற்றதும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் தயாரித்து கொடுத்ததும் அம்பலமானது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஹைதராபாத் சேர்ந்த தரகர் 42 வயது அகமது அலி கான் என்பவர் பின்னணியாக இருந்தது தெரிய வந்துள்ளது.

அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மும்பை மற்றும் விசாக்கப்பட்டினத்தில் எட்டு வருடங்களாக அகமது அலி கான் விசா சர்விஸ் மற்றும் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்ததும் வெளிநாட்டிற்கு செல்லக்கூடிய நபர்கள் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் வரும்போது அவர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து முகமது இலியாஸிடம் கொடுத்திருப்பதும், அதை பயன்படுத்தி போலி பாஸ்போர்ட் தயாரித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் பத்தாம் வகுப்பு கூட படிக்காதவர்களை அதிகம் படித்தவர்கள் போன்று காட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பி இருப்பதும் தெரிய வந்தது. அத்தகை நபர்களுக்கான பாஸ்போட்டில் இசிஆர் என்ற முத்திரை குத்தப்பட்டு இருக்கும். அப்படி முத்திரை குத்தப்பட்ட நபர்கள் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் அனுமதியின் பேரிலேயே வெளிநாடு செல்ல முடியும்.

எனவே ஈசிஆர் என்ற முகத்திரையை மறைத்து போலியாக பாஸ்போர்ட் தயாரித்து ஏராளமானோர் வெளிநாடு செல்ல அகமது அலி கான் உடந்தையாக இருந்துள்ளார். அந்த வகையில் நாடு முழுவதும் 500 போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்தும், விசா ஸ்டாம்பிங் செய்து கொடுத்தும், பணம் பெற்று இருப்பது தெரிய வந்தது.

அதற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் தனி அலுவலகத்தையும் அவர் நடத்தி வந்துள்ளார். போலி பாஸ்போர்ட் தயாரிப்பது எப்படி என தரகர் அலிகான் சென்னையில் உள்ள கும்பலுக்கு பயிற்சி கொடுத்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் youtube மூலமாகவும் தேவையான தகவல்களை பெற்று போலி பாஸ்போர்ட் தயாரித்ததாகவும், கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Google Pay, PhonePe அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்! உங்களுக்கான அப்டேட் இதோ!

கடந்த 15 வருடமாக போலீசாரிடம் சிக்காமல் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பல் தொடர்பாக சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசாரின் விசாரணை நீடித்து வருகிறது. அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றின் மூலம் யார் யாரெல்லாம் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக குடியுரிமை அதிகாரிகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கிய அகமது அலி கானிடம் விரிவான விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஏஜென்ட்கள் மூலமாக பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இத தொடர்பாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக முறையான ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களில் அணுகி விசாக்களை பெறுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.