கடந்த சில வருடங்களாக மக்களின் மனதை பெரிதும் கவர்ந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி. சமையலோடு சேர்த்து நகைச்சுவையையும் அள்ளித் தருவதால் பெரும்பாலானவரின் விருப்ப பட்டியலில் இணைந்துள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இதில் தற்பொழுது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்லும் இந்த நான்காவது சீசனில் டாப் 5 கான தேர்வு நடைபெற்றது.
அதில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே செய்த கேந்தட்டா ( kendata) என்னும் உணவானது நடுவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு இந்த வாரத்திற்கான சிறந்த உணவாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
கேந்தட்டா என்பது தஞ்சாவூர் மற்றும் மராத்திய உணவாகும். சிவாஜி மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட உணவு என்று சொல்லப்படுகிறது. இது தமிழகத்தில் தஞ்சாவூர் கூட்டு என்றும் அழைக்கப்படுகிறது. பலவிதமான காய்கள் மற்றும் பருப்பு சேர்த்து செய்யப்படும் இந்த உணவு ஒரு பாரம்பரியமான உணவாகும். இதில் பலவிதமான காய்கள் சேர்த்து செய்யலாம். இது இந்த நிகழ்ச்சியில் புடலங்காய் மற்றும் கருணை கிழங்கு சேர்த்து செய்யப்பட்டது. கேந்தட்டா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
கேந்தட்டா செய்ய தேவையான பொருட்கள்:
- கடலைப்பருப்பு – மூன்று ஸ்பூன்
- துவரம்பருப்பு – 1/4 கப்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- முழு மல்லி – ஒன்றரை ஸ்பூன்
- வெந்தயம் – அரை ஸ்பூன்
- மிளகாய் வற்றல் – 3
- கறிவேப்பிலை – சிறிதளவு
- துருவிய தேங்காய் – 1/4 கப்
- பெருங்காயத்தூள் – சிறிதளவு
- எண்ணெய் – 3 ஸ்பூன்
- கடுகு – 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
- சீரகம் – 1/4 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – இரண்டு
- புடலங்காய் – 1/4 கப்
- கீரை – ஒரு கைப்பிடி
- புளி – எலுமிச்சை அளவு
- கருணை கிழங்கு – 4
- பலாப்பழக் கொட்டை – 6 – 8
- தூளாக்கிய வெல்லம் – 2 ஸ்பூன்
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு.
கேந்தட்டா செய்முறை:
- இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கால் கப் துவரம் பருப்பையும் தனியாக வேக வைக்கவும்.
- ஒரு குக்கரில் கருணைக்கிழங்களையும் பலாக்கொட்டையையும் வேக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் முழு மல்லி, வெந்தயம், மிளகாய் வற்றல், கருவேப்பிலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு சீரகம் ஆகியவற்றை தாளித்து கறிவேப்பிலை சேர்க்க ப் பிறகு வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின்பு கால் கப் புடலங்காயை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
- இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கிய பிறகு பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு கைப்பிடி கீரையையும் சேர்த்துக் கொள்ளவும். ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- பின்பு வேக வைத்த கடலைப்பருப்பையும் மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும்.
- ஊற வைத்து புளியினை சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.
- இப்போது அரைத்த தேங்காயினை இதனுடன் கலந்து கொள்ளலாம்.
- இப்பொழுது வேகவைத்த கிழங்கு மற்றும் பலாக்கொட்டையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 2 ஸ்பூன் தூளாக்கிய வெல்லம் சேர்த்து குறைவான தீயில் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
- வேக வைத்த துவரம் பருப்பினை நன்கு மசித்து இதனுடன் சேர்க்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மல்லித்தழை தூவி இறக்கி விடலாம்.
- இது சப்பாத்தி சாதம் போன்ற உணவுகளுக்கு மிகவும் பொருத்தமாக சுவையாக இருக்கும்.