இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி தரம் செயல்பாடு அடிப்படையில் தேசிய கல்வி நிறுவனத் தரவரிசை கட்டமைப்பு ஆண்டுதோறும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
இதன் மூலம் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனம் என்று பெருமையை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக சென்னை ஐஐடி பெற்றுள்ளது. சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலில் கோவை அமிர்த விஸ்வ வித்ய பீடம் ஏழாவது இடத்தையும், வேலூர் விஐடி பல்கலைக்கழகம் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
சிறந்த கல்லூரிகள் பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. கோவை பிஎஸ்ஜி,ஆர் கிருஷ்ணகுமார் மகளிர் கல்லூரி நான்காவது இடத்தையும், சென்னை லயோலா கல்லூரி ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன. நாடு முழுவதும் உள்ளே சிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருப்பதும் தரவரிசை பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.
சிறந்த பொறியியல் கல்லூரி தரவரிசையில் சென்னை ஐஐடி தொடர்ந்து எட்டாவது முறையாக முதல் இடத்தில் நீடிக்கிறது. இந்த பட்டியலில் திருச்சி என்ஐடி ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சிறந்த மருந்தக கல்லூரிகள் பட்டியலில் ஜே எஸ் எஸ் கல்லூரி நான்காவது இடத்தையும், கோவை அமிர்த விஸ்வகம் கல்லூரி பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
கட்டடக்கலை சார்ந்த கல்லூரிகள் பட்டியலில் திருச்சி என்ஐடி நான்காவது இடத்தில் உள்ளது. சிறந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் வேலூர் சிஎம்சி மூன்றாவது இடத்தையும், புதுச்சேரி ஜிப்மர் பட்ட மேற்படிப்பு கல்லூரி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
பல் மருத்துவக் கல்லூரிகளில் சென்னை சவிதா மருத்துவக் கல்லூரி நாட்டிலேயே சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டு முதல் இடத்தை பிடித்துள்ளது. புதுமையான கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் சிறந்த 10 கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி இரண்டாவது இடத்தையும், காஞ்சிபுரத்தில் உள்ள ஐஐடி கல்லூரி எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளுக்கு சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி இரண்டாவது இடத்தில் உள்ளது.
பொறியியல் படிப்பில் வந்து குவியும் மாணவர்கள் !
முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ள விவசாயம் சார்ந்த படிப்புகளுக்கான பிரிவில் கோவையில் உள்ள மாநில வேளாண் பல்கலைக்கழகம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது .